மனைவியின் பிரிவால் வாடிய தந்தைக்கு மறுமணம் செய்து வைத்த மகள்..!


மனைவியின் பிரிவால் வாடிய தந்தைக்கு மறுமணம் செய்து வைத்த மகள்..!
x
தினத்தந்தி 24 Oct 2023 6:12 AM GMT (Updated: 24 Oct 2023 6:53 AM GMT)

கேரளாவில் மனைவி இறந்ததால் விரக்தியில் வாழ்ந்து வந்த தந்தைக்கு, அவரது மகளே திருமணம் செய்து வைத்த சம்பவம் நடந்திருக்கிறது.

திருவனந்தபுரம்,

திருமண வாழ்க்கை என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் நடக்கக்கூடிய ஒன்று. தான் கரம் பிடிக்கும் வாழ்க்கை துணையுடன் இறுதிவரை ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் வாழவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். ஆனால் பலரது வாழ்வில் அது நடப்பதில்லை. பாதியிலேயே வாழ்க்கை துணையை இழக்கும் நிலை ஏற்படும்போது, பலரால் அதனை தாங்கிக்கொள்ள முடிவதில்லை. ஏதோ வாழ்வோம் என்றே இருப்பார்கள். அவர்களது கவலை அவர்களுக்கு மட்டுமே தெரியும். கஷ்டப்பட்டு வளர்த்த குழந்தைகளும் அதுபோன்று பாதிக்கப்பட்ட தங்களது தாய்-தந்தையை பற்றி கண்டுகொள்வதில்லை. ஆனால் கேரளாவில் மனைவி இறந்ததால் விரக்தியில் வாழ்ந்து வந்த தந்தைக்கு, அவரது மகளே திருமணம் செய்து வைத்த நிகழ்வு நடந்திருக்கிறது.

அதுவும் 62 வயது தந்தைக்கு, அவரது வயதுக்கேற்ற பொருத்தமான 60 வயது பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்திருக்கிறார். அது பற்றிய விவரம் வருமாறு:-

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே உள்ள திருஏறங்காவு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ண குருப். அங்குள்ள பகவதி அம்மன் கோவில் அருகே கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எழுதுபொருட்கள் கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ராஷ்மி, ரெஞ்சு என்ற 2 மகள்கள், ரஞ்சித் என்ற மகன் ஆகியோருடன் வசித்து வந்தார். 2 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. மகன் ரஞ்சித் கொல்லத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு ராதாகிருஷ்ண குருப்பின் மனைவி திடீரென மாரடைப்பால் இறந்து விட்டார். மனைவி இறந்தது அவருக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மனைவி இறந்தபிறகு வழக்கம்போல அவர் நடந்து கொள்ளவில்லை. மிகவும் கவலையுடன் காணப்பட்டார். சிறிது நாட்களில் சரியாகி விடும் என்று அவரது மகள்களும், மகனும் நினைத்தனர்.ஆனால் ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் அவர் விரக்தியுடனேயே இருந்ததை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த அவரது மகள் ரெஞ்சு பார்த்தார்.

வெளிநாட்டில் வசித்து வரும் அவர், தனது தந்தைக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்க முடிவு செய்தார்.விரைவிலேயே அவர் வெளிநாட்டுக்கு திரும்பிச் செல்வதற்கு முன்னதாக தனது தந்தைக்கு திருமணம் செய்துவைத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ரெஞ்சு, திருமண வரன் பார்க்கக்கூடிய இணைய தளங்களில் பெண் தேடும் படலத்தில் ஈடுபட்டார்.

அப்போது கணவர் இறந்துவிட்டதால் தனியாக வாழ்ந்துவரும் மல்லிகா குமாரி (60 வயது) என்பவரை பற்றிய விவரம் ராதாகிருஷ்ண குருப்பின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. குழந்தைகள் இன்றி தனியாக வாழ்ந்து வந்த அந்த பெண், அவருக்கு பொருத்தமானவராக இருப்பார் என்று அவர்கள் கருதினர்.அவரது குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் அதுபற்றி இருவரிடமும் இரு வீட்டாரும் பேசினர். அவர்களும் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தனர். இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.அதன்படி ராதாகிருஷ்ண குருப்புக்கும் மல்லிகா குமாரிக்கும் கோவிலில் வைத்து இரண்டாவது திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் இருவரது உறவினர்கள் 50 பேர் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story