தனியார் கல்லூரியில் சட்டவிரோதமாக இடஒதுக்கீட்டில் மகளை சேர்த்த அரசு டாக்டர் போலீசார் விசாரணை


தனியார் கல்லூரியில் சட்டவிரோதமாக இடஒதுக்கீட்டில் மகளை  சேர்த்த அரசு டாக்டர் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 19 Jun 2023 6:45 PM GMT (Updated: 19 Jun 2023 6:46 PM GMT)

சிவமொக்காவில், அரசு டாக்டர் ஒருவர் தனியார் மருத்துவக்கல்லூரியில் இடஒதுக்கீட்டில் தனது மகளை சேர்த்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சிவமொக்கா-

சிவமொக்காவில், கல்வி சான்றிதழ்களில் முறைகேடு செய்து அரசு டாக்டர் ஒருவர் தனியார் மருத்துவக்கல்லூரியில் இடஒதுக்கீட்டில் தனது மகளை சேர்த்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

அரசு டாக்டர்

சிவமொக்கா மாவட்ட அரசு மெக்கான் ஆஸ்பத்திரியில் டாக்டர் ஒருவர் கடந்த பல வருடங்களாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் எம்.பி.பி.எஸ். படிக்க விரும்பினார். இதையடுத்து அந்த டாக்டர் தனது மகளை சிவமொக்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் சேர்க்க திட்டமிட்டார். மேலும் அவர் அரசு இடஒதுக்கீட்டில் தனது மகளை சட்டவிரோதமாக சேர்த்திட திட்டமிட்டார்.

இதற்காக அவர் தனது மகளின் கல்வி சான்றிதழ்களில் தாய்மொழிக்கல்வி கன்னடம் என்பதற்கு பதிலாக தெலுங்கு என்று மாற்றிட முடிவு செய்தார். அதற்காக பல்வேறு முறைகேடுகளை செய்த அவர் சிவமொக்காவில் உள்ள அந்த தனியார் மருத்துவக்கல்லூரியில் மகளுக்கு அரசு இடஒதுக்கீட்டில் இடமும் பெற்றுக் கொடுத்தார்.

தாய்மொழி கன்னடம்

அந்த மாணவி, மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த நிலையில் அரசு இடஒதுக்கீட்டில் சேர்ந்து படித்த மாணவ-மாணவிகளின் கல்வி சான்றிதழை கர்நாடக அரசு தேர்வு ஆணையத்திற்கு கல்லூரி நிர்வாகம் அனுப்பியது. அப்போது அந்த டாக்டர் மகளின் தாய்மொழி தெலுங்கு அல்ல, கன்னடம் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. அதாவது கடந்த 2009-2010-ம் ஆண்டில் சிவமொக்கா டவுன் பகுதியையொட்டிய ஒரு தனியார் பள்ளியில் படித்திருக்கிறார். அதையடுத்து அவர் தட்சிண கன்னடா மாவட்டம் கார்கலாவில் உள்ள ஒரு பி.யூ. கல்லூரியில் சேர்ந்து படித்து இருக்கிறார்.

அங்கு அவர் கன்னட வழியில் தான் படித்துள்ளார். ஆனால் அவர் அரசு ஒதுக்கீட்டில் இடம்பெற வேண்டி கல்விச்சான்றிதழிலும் சட்டவிரோதமாக திருத்தம் செய்து தாய்மொழி தெலுங்கு என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர் சிறுபான்மையினருக்கான அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் அவர் அந்த தனியார் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படித்தது உறுதியானது.

சட்டவிரோதமாக...

இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் சிவமொக்கா புறநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இதுபற்றி அந்த மாணவி படித்த பள்ளிக்கூடம், பி.யூ. கல்லூரி ஆகிய இடங்களிலும் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவியின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மாணவியை, அவரது தந்தையான டாக்டர் சட்டவிரோதமாக அரசு இடஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் சேர்த்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மாணவியின் கல்வி சான்றிதழை திரும்ப அரசிடம் ஒப்படைத்த கல்லூரி நிர்வாகம் அவருடைய உண்மையான சான்றிதழை சமர்ப்பிக்கும்படி பெற்றோரிடம் கேட்டுள்ளது. இதற்கிடையே மாணவி, அவரது தந்தை ஆகியோர் மீது சிவமொக்கா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் சிவமொக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story