ஆயுள் தண்டனை கைதியைநன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க முடிவு; கொலையானவர்களின் குடும்பத்தினர் எதிர்ப்பு


ஆயுள் தண்டனை கைதியைநன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க முடிவு;  கொலையானவர்களின் குடும்பத்தினர் எதிர்ப்பு
x

4 பேர் கொலை வழக்கில் தொடர்புடைய ஆயுள் தண்டனை கைதியை நன்னடத்ைத அடிப்படையில் விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மங்களூரு;

தூக்கு தண்டனை

தட்சிண கன்னடா மாவட்டம் உப்பினங்கடி அருகே பெரியடுக்காவை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் கடந்த 1994-ம் ஆண்டு பிப்ரவரி 23-ந்தேதி வாமஞ்சூரில் உள்ள தனது அத்தை அப்பி ஷெரிகார்த்தி, அவரது மகன் கோவிந்தா, மகள் சகுந்தலா, பேத்தி தீபிகா ஆகியோரை படுகொலை ெசய்திருந்தார்.

பணத்துக்காக இந்த கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கு தொடர்பாக கடந்த 2003-ம் ஆண்டு பிரவீன்குமாருக்கு சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது.


ஆயுள் தண்டனையாக குறைப்பு

இந்த நிலையில் பிரவீன்குமார், தனது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். ஆனால் அந்த மனு பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையாளிகள் 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை அடிப்படையாக கொண்டு தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பிரவீன்குமார் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை பரிசீலனை செய்த சுப்ரீம் கோர்ட்டு, பிரவீன் குமாரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்தது.

நன்னடத்தை அடிப்படையில்...

பிரவீன்குமார் தற்போது பெலகாவியில் உள்ள ஹிண்டல்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி நன்னடத்தை அடிப்படையில் கைதிகளை விடுவிக்க மாநில சிறை மற்றும் சீர்திருத்த துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில், பிரவீன்குமாரையும் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. பிரவீன்குமார் குறித்த விவரங்களை சேகரிக்கும்படி தட்சிண கன்னடா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறை நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு கொலையான 4 பேரின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பண ஆசைக்காக சொந்தக்காரர்களை கொலை செய்த பிரவீன்குமார் சிறையில் இருந்து வெளியே வந்தால் இந்த சமூகத்துக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார். அவரை போன்ற குற்றவாளியை விடுவிப்பது சுதந்திர தின பவள விழாவை அவமதிக்கும் செயல் என்று தெரிவித்துள்ளனர்.

டி.ஜி.பி.யிடம் முறையிட முடிவு

மேலும் அவர்கள் கொலையாளி பிரவீன்குமாரை விடுதலை செய்யக்கூடாது என்று வலியுறுத்தி போலீஸ் டி.ஜி.பி.யிடம் முறையிட கொலையான 4 பேரின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ரிஷிகேஷ் கூறுகையில், குற்றவாளியை விடுவிப்பது தொடர்பாக எனக்கு இதுவரை எந்த கடிதமும் வரவில்லை என்றார்.


Next Story