ஒட்டுமொத்த உலகிற்கான ஒரு சவால் டீப்பேக்: பிரதமர் மோடி பேச்சு


ஒட்டுமொத்த உலகிற்கான ஒரு சவால் டீப்பேக்:  பிரதமர் மோடி பேச்சு
x

செயற்கை நுண்ணறிவு 21-ம் நூற்றாண்டை அழிப்பதிலும் கூட ஒரு பெரிய பங்கு வகிக்கலாம் என்று பேசியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய நட்புறவுக்கான உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசும்போது, செயற்கை நுண்ணறிவு பல்வேறு நேர்மறை தாக்கங்களை கொண்டுள்ளது. ஆனால், அது பல எதிர்மறை பாதிப்புகளையும் கொண்டுள்ளது என்பது வருத்தத்திற்குரிய விசயம்.

21-ம் நூற்றாண்டின் வளர்ச்சிக்கான மிக பெரிய உபகரணங்களில் ஒன்றாக செயற்கை நுண்ணறிவு மாறலாம். ஆனால், 21-ம் நூற்றாண்டை அழிப்பதிலும் கூட அது ஒரு பெரிய பங்கு வகிக்கலாம்.

டீப்பேக் ஆனது, ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரு சவாலாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு உபகரணங்கள் பயங்கரவாதிகளின் கைகளில் கிடைப்பதும் கூட ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்.

செயற்கை நுண்ணறிவு ஆயுதங்கள், பயங்கரவாத அமைப்புகளுக்கு கிடைத்து விட்டால், சர்வதேச பாதுகாப்பில் இது ஒரு பெரிய தாக்கம் ஏற்படுத்தும். இதனை எதிர்கொள்வது எப்படி என்று நாம் திட்டமிட வேண்டிய தேவை உள்ளது என்று பேசியுள்ளார்.

சமீபத்தில், டீப்பேக் உதவியுடன் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைப், கஜோல் உள்ளிட்டோரின் முகங்களை உருமாற்றம் செய்து ஆபாச வீடியோக்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின. இதனை தொடர்ந்து இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு எதிராக அபராதம், சிறை தண்டனை உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.


Next Story