பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் - ராஜ்நாத்சிங்


பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் - ராஜ்நாத்சிங்
x

பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் ராஜ்நாத்சிங் பேசினார்.

அமைதிக்கு சவால்

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ் ெகன்ட் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் ராணுவ மந்திரிகள் கூட்டம் நடைபெற்றது. அதில், ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

பயங்கரவாதம் என்பது உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக உள்ளது. அனைத்துவகையான பயங்கரவாதத்தையும் எதிர்த்து போராடவும், இந்த பிராந்தியத்தை அமைதியாக வைத்திருக்கவும் இந்தியா உறுதி பூண்டுள்ளது.

ஒழித்துக் கட்டுங்கள்

எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்பட பயங்கரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும், யார் செய்தாலும், எந்த காரணத்துக்காக செய்தாலும் அது மனித இனத்துக்கு எதிரான குற்றம். அதை ஒழித்துக்கட்ட வேண்டும்.

இதற்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். இந்த அமைப்பின் ராணுவ மந்திரிகளுக்காக அடுத்த ஆண்டு இந்தியாவில் ஒரு பயிலரங்கம் நடத்தப் போகிறோம். பாதுகாப்பு சிந்தனைவாதிகளின் கருத்தரங்கையும் நடத்த உள்ளோம். அதில் இந்த அமைப்பின் நாடுகள் கொள்ள வேண்டும்.

ஆப்கானிஸ்தான், உக்ரைன்

அமைதியான, பாதுகாப்பான, நிலையான ஆப்கானிஸ்தான் அமைய இந்தியா முழு ஆதரவு அளிக்கிறது. பேச்சுவார்த்தை மூலமாக அங்கு நல்லிணக்கத்தை எட்ட ஆப்கானிஸ்தான் அரசை அனைத்து நாடுகளும் ஊக்குவிக்க வேண்டும்.

எந்த நாட்டையும் அச்சுறுத்தவோ, தாக்கவோ ஆப்கானிஸ்தான் பயன்படுத்தக்கூடாது. அதாவது, பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கவோ, பயிற்சி அளிக்கவோ, நிதி உதவி அளிக்கவோ கூடாது.

உக்ரைன்-ரஷியா இடையே பேச்சுவார்த்தை நடத்துவதை இந்தியா ஆதரிக்கிறது. உக்ரைனுக்கு மனிதாபிமான உதவி அளிக்கும் ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது.

அடுத்த ஆண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

ரஷியாவுக்கு நன்றி

இந்த கூட்டத்துக்கு இடையே ரஷிய ராணுவ மந்திரி செர்ஜி சோய்குவை ராஜ்நாத்சிங் சந்தித்தார். பரஸ்பரம் இருவரும் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

சமீபத்தில், இந்தியாவின் முக்கிய தலைவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய ஐ.எஸ். பயங்கரவாதிைய ரஷியா கைது செய்ததற்கு ராஜ்நாத்சிங் பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.


Next Story