டெல்லி: ஆம் ஆத்மி அரசின் புதிய மந்திரிகளாக அதிஷி, பரத்வாஜ் பதவியேற்பு


டெல்லி: ஆம் ஆத்மி அரசின் புதிய மந்திரிகளாக அதிஷி, பரத்வாஜ் பதவியேற்பு
x

அதிஷி மர்லினா மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகிய இருவரும் ஆம் ஆத்மி அரசின் புதிய மந்திரிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.

புதுடெல்லி,

டெல்லி துணை முதல்-மந்திரி பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா மதுபானக்கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுகாதார மந்திரி பதவி வகித்து பின்னர் இலாகா இல்லாத மந்திரியாக இருந்து வந்த வகித்த சத்யேந்தர் ஜெயின் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இருவரும் தங்களது பதவியை கடந்த மாதம் 28-ந்தேதி ராஜினாமா செய்தனர். இருவரது ராஜினாமாக்களையும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். மேலும் சவுரப் பரத்வாஜ் மற்றும் அதிஷி மர்லினா ஆகியோரை புதிய மந்திகளாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.

பரத்வாஜ் (வயது 43), 2013-ம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். டெல்லி ஜல் வாரியத்தின் துணைத்தலைவர் பதவி வகித்து வந்த அவர், கெஜ்ரிவால் அரசில் 2013-ல் சிறிது காலம் மந்திரி பதவியும் வகித்துள்ளார்.

பெண் தலைவரான அதிஷி மர்லினா (வயது 41), 2020-ம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது முதல் அதில் இருந்து வரும் அதிஷி, சிசோடியாவின் கல்வித்துறை ஆலோசராக இருந்து வந்தார்.

இந்நிலையில் அதிஷி மர்லினா மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகிய இருவரும் இன்று ஆம் ஆத்மி அரசின் புதிய மந்திரிகளாக பதவியேற்றுக் கொண்டனர். டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் முன்னிலையில் அவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதில் அதிஷி மர்லினாவுக்கு கல்வி, பொதுப்பணித்துறை, மின்சாரம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளும், பரத்வாஜுக்கு சுகாதாரம், நீர்வளம், கிராம்ப்புற வளர்ச்சி மற்றும் தொழிற்சாலைகள் ஆகிய துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story