அமலாக்கத்துறை 6வது முறையாக சம்மன்- ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவால்
அமலாக்கத்துறை அனுப்பும் சம்மன்கள் சட்டவிரோதமானவை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
இதனால் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டது. ஆனால் இதுவரை 5 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. தனக்கு அனுப்பிய சம்மன் சட்டவிரோதமானது. அதை திரும்பப் பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதனைதொடர்ந்து அமலாக்கத்துறை 6வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. அந்த சம்மனில் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று நேரில் ஆஜராகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராக மாட்டார் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. மேலும் "அமலாக்கத்துறை அனுப்பும் சம்மன்கள் சட்டவிரோதமானவை. அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. திரும்பத் திரும்பச் சம்மன் அனுப்புவதை விட்டுவிட்டு, நீதிமன்றத்தின் முடிவுக்காக அமலாக்கத்துறை காத்திருக்க வேண்டும்" என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.