அமலாக்கத்துறை விசாரணையை தவிர்த்த விவகாரம் - கெஜ்ரிவால் நேரில் ஆஜராக டெல்லி கோர்ட்டு சம்மன்
இதுவரை அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியும் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
புதுடெல்லி,
டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரியாக இருந்த மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த, கடந்த ஆண்டு நவம்பர் 2, டிசம்பர் 21 ஆகிய தேதிகளில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. அதன்பிறகு கடந்த ஜனவரி 3-ந்தேதியும், 18-ந்தேதியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதையும் கெஜ்ரிவால் புறக்கணித்தார்.
தொடர்ந்து 5-வது முறையாக கடந்த 2-ந்தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் 5-வது முறையும் அமலாக்கத்துறை விசாரணையை கெஜ்ரிவால் தவிர்த்துவிட்டார். இந்த நிலையில் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனக்கூறி டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத்துறையின் விசாரணையை 5 முறை தவிர்த்தது ஏன் என்பது தொடர்பாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 17-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.