டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு: மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு


டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு: மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு
x

டெல்லி மதுபான கொள்ளை ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் வரும் 17- ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லி,

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவிடம் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ அலுவலகத்தில் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

விசாரணை முடிவில், சிசோடியாவை அன்றிரவு சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டு முதலில் மார்ச் 4-ந்தேதி வரை அனுமதி அளித்து உத்தரவிட்டது. பின்னர் சிபிஐ காவல் 2-வது முறையாக மார்ச் 6-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

பின்னர் நீதிமன்ற காவல் மார்ச் 20-ந்தேதி வரையும், தொடர்ந்து ஏப்ரல் 5-ம் தேதி வரையும் சிசோடியாவின் காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. நீதிமன்ற காவலில் உள்ள மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிசோடியா மீது பண மோசடி வழக்கும் பதிவுசெய்யப்பட்ட நிலையில் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், நீதிமன்ற காவல் நிறைவடையயுள்ள நிலையில் மணீஷ் சிசோடியா இன்று சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தவேண்டியுள்ளதால் மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

விசாரணை அமைப்பின் கோரிக்கையை ஏற்ற கோர்ட்டு, மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 17-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டதையடுத்து மணீஷ் சிசோடியா திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story