எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒரு சுயநல கூட்டணி; பா.ஜ.க. முன்னாள் மத்திய மந்திரி பரபரப்பு பேச்சு


எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒரு சுயநல கூட்டணி; பா.ஜ.க. முன்னாள் மத்திய மந்திரி பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 17 July 2023 11:02 AM GMT (Updated: 17 July 2023 11:39 AM GMT)

டெல்லியில் ஏற்பட்டு உள்ள வெள்ளம், மேற்கு வங்காளத்தில் ஏற்பட்ட வன்முறை என அனைத்து விசயங்களையும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் திசை திருப்பி விட்டு உள்ளது என பா.ஜ.க. முன்னாள் மத்திய மந்திரி பேசியுள்ளார்.

புதுடெல்லி,

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க கூடாது என எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசித்து வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் மாபெரும் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 23-ந்தேதி நடைபெற்றது. இதில், 16 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது மற்றும் பா.ஜ.க.வை வீழ்த்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூருவில் இன்றும், நாளையும் (17, 18 ஆகிய நாட்களில்) நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்ள 24 கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது. அக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அதில், கட்சிகளுக்கு இடையே விரிவான ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான விசயங்களில் கவனம் செலுத்தப்படும் என கூறப்படுகிறது.

கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சென்று உள்ளார். இதேபோன்று, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், பா.ஜ.க.வின் மக்களவை எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி மற்றும் மூத்த தலைவரான ரவி சங்கர் பிரசாத் இன்று கூறும்போது, வெள்ளத்தில் இருந்து டெல்லியை பாதுகாக்க கெஜ்ரிவால் எதுவும் செய்யவில்லை. அவர் மத்திய அரசை தொடர்ந்து குற்றஞ்சாட்டி பேசி வருகிறார்.

வெள்ள சூழலை பற்றி காங்கிரஸ் கட்சி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மேற்கு வங்காளத்தில் நிறைய வன்முறை சம்பவங்கள் நடந்து விட்டன. ஒவ்வொருவரும் அதுபற்றி பேசாமல் அமைதியாக உள்ளனர். அனைத்து விசயங்களையும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் திசை திருப்பி விட்டு உள்ளது என அவர் பேசியுள்ளார்.

கூட்டம் பற்றி குறிப்பிட்ட பா.ஜ.க. எம்.பி. பிரசாத், அவர் (கெஜ்ரிவால்) வெள்ள நெருக்கடியான சூழலில் அதனை விட்டு விட்டு, கூட்டத்திற்கு சென்று உள்ளார். என்ன மாதிரியான ஒரு முதல்-மந்திரி அவர்? என்ன நடக்கிறது இங்கே? ஏன் இது நடக்கிறது?

மேற்கு வங்காளத்தில் தாக்குதலில் மக்கள் அடித்து, உதைக்கப்பட்டு உள்ளனர். மக்கள் வன்முறையை எதிர்கொண்டு உள்ளனர். அவர்களை விட்டு விட்டு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூட்டத்திற்கு சென்று உள்ளார்.

காங்கிரஸ் கட்சி அமைதியாக இருக்கிறது. இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் கூட அமைதி காக்கின்றன. இதுவே ஒரு சுயநல கூட்டணி என அழைக்கப்படுகிறது. டெல்லியில் கூட காங்கிரஸ் அமைதியாக இருக்கிறது.

இதுபோன்ற மக்கள் நாட்டுக்கு ஒரு எதிர்காலம் வழங்குவார்களா? நிச்சயம் இல்லை என்று அவர் கூறியுள்ளார். டெல்லியில் சில நாட்களாக தொடர் கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலின்போது, ஏற்பட்ட வன்முறைக்கு 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இதுபற்றி பா.ஜ.க.வில் உண்மை கண்டறியும் 5 பேர் கொண்ட கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.


Next Story