டெல்லி சுகாதார மந்திரிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்; ஜாமீன் மனு மீது நாளை விசாரணை
டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயினை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி டெல்லி நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
டெல்லி சுகாதார மற்றும் உள்துறை மந்திரியான சத்யேந்தர் ஜெயினை சட்டவிரோத பணமோசடி வழக்கில் அமலாக்க துறையினர் கடந்த மே மாதம் இறுதியில் கைது செய்தனர்.
இதுபற்றி, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் அளித்த பேட்டியில், சத்யேந்தர் ஜெயின் மீது போடப்பட்ட வழக்கு முற்றிலும் பொய்யானது. அரசியல் உள்நோக்கத்தின் அடிப்படையில் ஜோடிக்கப்பட்டது.
எங்கள் அரசும், ஆம் ஆத்மி கட்சியும் மிகவும் நேர்மையானவை. நீதித்துறையின் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். சத்யேந்தர் ஜெயின் குற்றமற்றவராக வெளியே வருவார். அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கு நீடிக்காது என்று கூறினார்.
இந்நிலையில், சத்யேந்தர் ஜெயினை வருகிற 9ந்தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி கீதாஞ்சலி கோயல் அனுமதி வழங்கினார்.
இந்த நிலையில், டெல்லி சுகாதார மந்திரி மற்றும் அவரது உதவியாளரின் இடங்களில் அமலாக்க துறை கடந்த 7ந்தேதி சோதனை நடத்தியது. ஒரு நாள் முழுவதும் நடந்த இந்த சோதனையில், ரூ.2.82 கோடி மதிப்பிலான பணம் மற்றும் 1.80 கிலோ எடை கொண்ட 133 தங்க காசுகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பணமோசடி வழக்கில் அமலாக்க துறை காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், டெல்லி சுகாதார மற்றும் உள்துறை மந்திரியான சத்யேந்தர் ஜெயின் இன்று ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிமன்றம் அனுப்பி வைத்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் அமலாக்க துறை கோரிக்கை எதுவும் வைக்காத நிலையில் ஜெயின் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆம் ஆத்மி தலைவர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள், அமலாக்க துறையின் கட்டுக்குள் உள்ள ஜெயினின் நிலையை கவனத்தில் கொண்டு, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அவரை கொடுமைப்படுத்தி, துன்புறுத்தலில் ஈடுபடுகிறது என கூறி வருகின்றனர். என்றாலும், அவரது ஜாமீன் மனு மீது நாளை காலை 11 மணியளவில் விசாரணை நடைபெற உள்ளது.