டெல்லியில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
டெல்லியில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில், கடந்த சில நாட்களாக வெப்பம் மக்களை வாட்டி வந்த நிலையில், இன்று நகரின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக அங்கு வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது.
இடியுடன் கூடிய மழையின் காரணமாக பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. நகரின் சில பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மேலும், பலத்த காற்றின் காரணமாக நகரின் 44 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இந்த சூழலில், இன்று இரவு டெல்லியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் இரவில் பலத்த காற்றுடன் (50-60 கிமீ) மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதேபோன்ற வானிலை அடுத்த 8 முதல் 10 மணி நேரத்தில் பஞ்சாப், ஹரியானா, வடக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்தில் நிலவும். மேலும் இந்த பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.