டெல்லி மதுபான கொள்கை வழக்கு: சிசோடியா நீதிமன்ற காவல் ஏப்ரல் 3 வரை நீட்டிப்பு; ஜாமீன் மனு மீது நாளை விசாரணை


டெல்லி மதுபான கொள்கை வழக்கு: சிசோடியா நீதிமன்ற காவல் ஏப்ரல் 3 வரை நீட்டிப்பு; ஜாமீன் மனு மீது நாளை விசாரணை
x

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் வருகிற ஏப்ரல் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.


புதுடெல்லி,


டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவின் பெயர் அடிபட்ட நிலையில், கடந்த பிப்ரவரி 26-ந்தேதி சி.பி.ஐ. அலுவலகத்தில் 8 மணி நேரம் அவரிடம் நேரடி விசாரணை நடந்தது.

விசாரணை முடிவில், சிசோடியாவை அன்றிரவு சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டு முதலில் மார்ச் 4-ந்தேதி வரை அனுமதி அளித்து உத்தரவிட்டது. பின்னர் சி.பி.ஐ. காவல் 2-வது முறையாக மார்ச் 6-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிசோடியா சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அது விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சிசோடியாவுக்கு 20-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், அவர் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதன்படி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், சிசோடியாவிடம் டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி பற்றி அமலாக்க துறை அதிகாரிகள் கடந்த 9-ந்தேதி விசாரணை நடத்தினர். அதற்கு இரு நாட்களுக்கு முன்பும் இதேபோன்று விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டனர்.

இந்நிலையில், டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு மணீஷ் சிசோடியாவை அமலாக்க துறை இன்று ரோஸ் அவென்யூ கோர்ட்டில் காணொலி காட்சி முறையில் ஆஜர்படுத்தியது. அவர் வருகிற 22-ந்தேதி வரை அமலாக்க துறையின் காவலில் உள்ளார்.

இதில், சிசோடியாவின் நீதிமன்ற காவலை 14 நாட்களுக்கு நீட்டித்து ரோஸ் அவென்யூ கோர்ட்டு இன்று உத்தரவிட்டது. சிறப்பு நீதிபதி எம்.கே. நாக்பால் பிறப்பித்த உத்தரவின்படி, சிசோடியாவுக்கு வருகிற ஏப்ரல் 3-ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அவரது ஜாமீன் மனு மீது நாளை (மார்ச் 21-ந்தேதி) விசாரணை நடைபெற உள்ளது. அந்த மனுவில், அனைத்தும் முன்பே கைப்பற்றப்பட்டு விட்ட நிலையில், தன்னை காவலில் வைத்திருப்பதற்கான நோக்கத்தில் எந்தவித பலனும் இருக்காது என அவர் குறிப்பிட்டு உள்ளார்.


Next Story