ஜெர்மனியின் மெட்ரோ ரெயில்களை விட டெல்லி மெட்ரோ சிறப்பாக உள்ளது: ஜெர்மனி தூதர் பேட்டி


ஜெர்மனியின் மெட்ரோ ரெயில்களை விட டெல்லி மெட்ரோ சிறப்பாக உள்ளது: ஜெர்மனி தூதர் பேட்டி
x

ஜெர்மனியில் உள்ள பல மெட்ரோ ரெயில்களை விட டெல்லி மெட்ரோ சிறப்பாக உள்ளது என இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பேட்டியில் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நடப்பு ஆண்டின் மத்தியில் சீனாவை மக்கள் தொகையில் இந்தியா முந்தி விடும் என ஐ.நா. அமைப்பு இந்த மாத தொடக்கத்தில் மதிப்பீடு செய்திருந்தது.

ஜெர்மனியில் இருந்து வெளிவரும் டெர் ஸ்பீகல் என்ற பத்திரிகையில், இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை முந்திய பின்னர் எப்படி இருக்கும் என்ற அடிப்படையில் கார்ட்டூன் ஒன்று இடம் பெற்றது.

அதில், ரெயில் ஒன்றின் மேற்கூரை உள்பட ரெயிலின் அனைத்து பகுதிகளிலும் கொடியை பிடித்தபடி இந்தியர்கள் சூழ்ந்து இருக்கும் காட்சிகளும், அருகே சீன நாட்டின் தேசிய கொடியின் சின்னத்துடன் புல்லட் ரெயில் ஒன்று செல்வது போன்ற காட்சிகளும் இருந்தன.

இதற்கு இந்தியர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது, இனவெறி மற்றும் காலனி ஆதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டன.

இதுபற்றி இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்ர்மேன்னிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பேட்டியில், எனது தனிப்பட்ட கருத்தின்படி, அந்த கார்ட்டூன் படம், கேலியாகவும் இல்லை. முறையான ஒன்றாகவும் இல்லை.

இந்த கார்ட்டூன் படம் வரைந்த ஓவியரை, டெல்லியில் என்னுடன் மெட்ரோவில் பயணிக்க வரும்படி அழைப்பு விட விரும்புகிறேன். டெல்லி மெட்ரோவை போன்று ஜெர்மனியில் உள்ள பல மெட்ரோ ரெயில்கள் சிறப்பாக இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

ரெயில்வே துறைக்கும் கூட இதேநிலையே காணப்படுகிறது. இந்தியாவை பற்றி அவர் கொஞ்சம் விசாரித்து இருக்க வேண்டும். இந்தியர்களின் ரெயில்வே நடைமுறை எப்படி உள்ளது என்று அவர் கேட்டு அறிந்திருக்கலாம் என பிலிப் கூறியுள்ளார்.


Next Story