டெல்லி: ஓடு பாதையில் விபத்தில் சிக்கிய விமானம்; பயணிகள் இடையே பரபரப்பு


டெல்லி: ஓடு பாதையில் விபத்தில் சிக்கிய விமானம்; பயணிகள் இடையே பரபரப்பு
x

டெல்லியில் ஓடு பாதையில் விமானம் விபத்தில் சிக்கிய விவகாரத்தில் விமான போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் டெல்லி விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுடெல்லி,

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி இண்டிகோ தனியார் விமான நிறுவனத்தின் 6இ 6054 என்ற எண் கொண்ட விமானம் ஒன்று புறப்பட்டு உள்ளது. அப்போது, ஓடு பாதையில் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. இதில், அதன் வால் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

விமானத்தின் வால் பகுதியில் நீல வண்ண பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதற்கான தடயங்கள் காணப்பட்டன. விமானம் புறப்படும்போது அல்லது தரையிறங்கும்போது, அதன் வால் பகுதி ஓடுபாதையில் தரையில் படும்போது இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இது விமானத்திற்கு பெரிய ஆபத்து ஏற்படுத்த கூடும். இதனை தொடர்ந்து, உடனடியாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரியை தொடர்பு கொண்டு விமானி விவரங்களை கூறியுள்ளார். இதன்பின் அனுமதி கிடைத்து, விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. இதனால், பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. எனினும், அதிர்ஷ்டவசத்தில், இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.

இதுபற்றி விமான போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் டெல்லி விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. விமானத்திற்கு உண்மையில் என்ன நேர்ந்தது என்பது பற்றியும் விசாரணை தொடங்கியுள்ளது.


Next Story