டெல்லி: தெருவில் ஆடலாம், பாடலாம், யோகா செய்யலாம்... 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அமலான திட்டம்


டெல்லி: தெருவில் ஆடலாம், பாடலாம், யோகா செய்யலாம்... 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அமலான திட்டம்
x

டெல்லியில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் 3 ஆண்டுகள் கழித்து தெருவில் ஆடல், பாடல், யோகா உள்பட பல விசயங்களை அனுமதிக்கும் ராஹ்கிரி தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.



புதுடெல்லி,


டெல்லியில் ராஹ்கிரி தினம் என்றொரு தினம் மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த தினத்தில், குறிப்பிட்ட சாலையில் கார்கள் செல்வதற்கான அனுமதிக்கு தடை விதிக்கப்படும்.

அதற்கு பதிலாக, குடிமக்கள் அனைவரும் போட்டிகளில் கலந்து கொள்வது, யோகா செய்வது, கல்வி, விளையாட்டு, இசை மற்றும் நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் ஈடுபட அனுமதி வழங்கப்படும்.

இதன்படி, கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு 3 ஆண்டுகள் கழித்து இந்த ராஹ்கிரி தினம் இன்று மீண்டும் கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள சாலைகளில் கார்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த தினத்தில் காலை 7 மணி முதல் 10 மணி வரையில் குடிமக்களுக்கான பல்வேறு நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நாளில், சாலை பாதுகாப்பு, நடைபயிற்சி மற்றும் மகளிர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளும் நடத்த அனுமதிக்கப்பட்டது.

நீடித்த மற்றும் பாதுகாப்பு நகரங்கள் உருவாக்கும் நோக்குடன் இந்த ராஹ்கிரி தினம் கொண்டு வரப்பட்டது. இதனை டெல்லி போக்குவரத்து போலீசார், ராஹ்கிரி அறக்கட்டளை அமைப்பு, நீடித்த இயக்கத்திற்கான நெட்வொர்க் மற்றும் புதுடெல்லி நகராட்சி கவுன்சில் ஆகியவை இணைந்து மேற்கொள்கிறது.

இதனால், சமூகத்தில் வாழ்க்கை தரம் மேம்படும். நிறைய நடப்பது, பாதசாரிகள் தெருக்களை அதிகம் பயன்படுத்துவது ஆகியவை சமூக மேம்பாடு அடைய வழிவகுக்கும் என போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா கூறியுள்ளார்.

ஜி-20 மாநாட்டின் இலக்கான நீடித்த மற்றும் வாழ கூடிய நகரங்கள் உருவாதல் மற்றும் நீடித்த இயக்கம் ஆகியவற்றுக்கு பங்காற்றும் வகையிலும் இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டு உள்ளது.


Next Story