இந்தியாவில் 100 மாவட்டங்களில் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சி: ஜி-20 நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தகவல்


இந்தியாவில் 100 மாவட்டங்களில் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சி: ஜி-20 நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தகவல்
x

கோப்புப்படம்

இந்தியாவில் 100-க்கு மேற்பட்ட மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முயற்சிகள் நடந்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

ஜி-20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு, இந்தியாவில் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஜி-20 தொடர்பான நிகழ்ச்சிகள் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகின்றன.

அந்தவகையில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், ஜி-20 நாடுகளின் மேம்பாட்டுத்துறை மந்திரிகள் கூட்டம் நடந்தது. அதில், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசினார்.

அவர் பேசியதாவது:-

தொழில்நுட்பத்தை ஜனநாயகமயம் ஆக்குவது நல்லது. இந்தியாவில், டிஜிட்டல் மயமாக்கல், புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

தொழில்நுட்பம்

மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான கருவியாக தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதுதொடர்பான தனது அனுபவங்களை உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா ஆர்வமாக இருக்கிறது.

வளர்ச்சி என்பது தெற்குலக நாடுகளுக்கு முக்கியமான விஷயம். கொரோனாவால் தெற்குலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. புவி அரசியல் பதற்றத்தால் ஏற்பட்ட உணவு, எரிபொருள், உரம் தொடர்பான பிரச்சினைகள், மற்றொரு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.

இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எடுக்கும் முடிவுகள் ஒட்டு மொத்த மனித இனத்துக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. நிலையான வளர்ச்சி இலக்குகள் பின்தங்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கூட்டு பொறுப்பு என்று நான் உறுதியாக நம்புகிறேன். யாரும் பின்தங்கிவிடக்கூடாது.

100 மாவட்டங்கள்

இதை நிறைவேற்ற ஒரு செயல் திட்டம் வைத்துள்ளோம் என்பதை உலகத்துக்கு இந்த அமைப்பு சொல்வது முக்கியம். நிலையான வளர்ச்சி இலக்குகளை நிறைவேற்ற நாம் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். சில நாடுகள் சந்தித்து வரும் கடன் அபாயங்களுக்கு தீர்வு காண வேண்டும்.

இந்தியாவில், வளர்ச்சி அடையாத 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை வளர்ச்சிக்கு தூண்டுகோலாக உருவெடுத்துள்ளன. இந்த வளர்ச்சி மாதிரியை ஜி-20 வளர்ச்சி மந்திரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

வாரணாசியின் பெருமை

இந்தியாவில், ஆறுகள், மரங்கள், மலைகள் மற்றும் அனைத்துவகையான இயற்கை மீதும் நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். நாங்கள் பெண்கள் அதிகாரத்துக்கு மட்டும் பாடுபடுவது இல்லை. பெண்கள் தலைமையிலான அதிகாரம்தான் எங்கள் நோக்கம்.

வாரணாசி, மிகவும் பழமையான நகரம். இக்கூட்டம் நடத்த பொருத்தமான இடம். அறிவு, ஆலோசனை, விவாதம், கலாசாரம், ஆன்மிகம் ஆகியவற்றுக்கான மையமாக பல நூற்றாண்டுகளாக திகழ்கிறது.

எனவே, கூட்ட அறையிலேயே நேரத்தை செலவிடாமல், வெளியே சென்று காசியின் உணர்வை அனுபவியுங்கள். கங்கா ஆரத்தியை அனுபவிப்பது, சாரநாத்தை பார்ப்பது ஆகியவை நீங்கள் விரும்பிய பலன்களை பெற உதவும் என்று அவர் பேசினார்.


Next Story