ஒவ்வோர் இந்திய மொழியிலும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு விவரங்கள்; தலைமை நீதிபதி பேச்சு - பிரதமர் வரவேற்பு
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு விவரங்கள் ஒவ்வோர் இந்திய மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அதன் நகல்கள் வழங்கப்படும் என தலைமை நீதிபதி பேசியதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
நாட்டில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் கோர்ட்டு விசாரணையை லைவ் நிகழ்வாக வெளியிட்டது. இது பல்வேறு தரப்பினராலும் வரவேற்கப்பட்டது.
இந்நிலையில், மராட்டியம் மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நேரலையாக வெளிவரும்போது, சட்ட துறை ஆசிரியர்கள் மற்றும் பயிலும் மாணவர்கள் அதனை கவனித்து, விவாதத்தில் ஈடுபடலாம்.
இதுபோன்ற நேரலை விசயங்களை விவாதிக்கும்போது, நமது சமூகத்தில் ஊடுருவியுள்ள அநீதியை நீங்கள் உணர முடியும் என்று பேசினார்.
தொடர்ந்து அவர், எங்களது அடுத்த கட்ட பணியானது, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு விவரங்கள் அடங்கிய மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நகல்களை ஒவ்வோர் இந்திய மொழியிலும் வழங்க இருக்கிறோம்.
நமது குடிமகன்கள் புரிந்து கொள்ள கூடிய ஒரு மொழியில் எங்களது தீர்ப்பு விவரங்கள் சென்றடையாவிட்டால், நாங்கள் மேற்கொள்ளும் பணியானது நாட்டின் 99% மக்களை சென்று சேராது என்று கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தி இதனை மேற்கொள்ள முடியும் என்று கூறினார்.
அவரது பேச்சுக்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தியாவில் பல்வேறு மொழிகள் உள்ளன. அவை நமது கலாசார துடிப்போடு சேர்ந்து உள்ளன.
பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை ஒருவரது தாய்மொழியில் படிக்கும் வகையில் வாய்ப்பை வழங்குவது உள்பட இந்திய மொழிகளை ஊக்குவிக்க எண்ணற்ற முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என தெரிவித்து உள்ளார்.