மோசமடைந்த காற்றின் தரம்: டெல்லியில் டீசல் பேருந்துகள் நுழையத் தடை.!


மோசமடைந்த காற்றின் தரம்: டெல்லியில் டீசல் பேருந்துகள் நுழையத் தடை.!
x

டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால், டீசல் பேருந்துகளுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், காற்றின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், பிற மாநிலங்களில் இருந்து வரும் டெல்லியில் இயங்கும் அனைத்து டீசல் பேருந்துகளும் நவம்பர் 1ம் தேதி முதல் தடை செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் மந்திரி கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறிய அவர், குளிர்கால செயல் திட்டத்தின் கீழ் டெல்லி அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி 397 ஆக இருந்த காற்றின் தரக் குறியீடு (AQI) நேற்று 325 ஆக இருந்தது. இது காற்றின் தரம் முன்னேற்றம் அடைந்துள்ளதைக் காட்டுகிறது. அதை மேலும் மேம்படுத்த முயற்சித்து வருகிறோம்.

எனவே, அடுத்த 15 நாட்கள் மிக முக்கியமானவை, அதற்காக நாங்கள் தயாராகி வருகிறோம். தற்போது வாகனங்களால் ஏற்படும் மாசு அதிகரித்து வருகிறது. டெல்லியில் அனைத்து பேருந்துகளும் சிஎன்ஜியில் இயங்குகின்றன. 800க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகளும் உள்ளன. இருந்தும் உத்திரபிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் என்சிஆர் பகுதிகளில் பிஎஸ் III மற்றும் பிஎஸ் IV டீசல் பேருந்துகள் இயங்குவதால் டெல்லியில் மாசு அதிகரித்து வருகிறது.

நவம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து நுழைவுச் சாவடிகளிலும் போக்குவரத்துத் துறை மூலம் சோதனை நடத்தப்படும். விதிமுறைகளை பின்பற்றாத பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story