பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது குமாரசாமியின் கட்சி


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது குமாரசாமியின் கட்சி
x

கர்நாடகத்தில் பா.ஜனதாவுடன் ஜனதா தளம்(எஸ்) கட்சி 2-வது முறையாக கூட்டணி அமைத்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) ஆகிய மூன்று கட்சிகள் தான் பிரதானமாக உள்ளன. கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பிற கட்சிகள் பெயரளவில் இருந்தாலும் அந்த மூன்று கட்சிகள் இடையே தான் எப்போதும் போட்டி இருக்கிறது. அதிலும் ஜனதா தளம்(எஸ்) கட்சி ஒக்கலிக சமூக மக்கள் அதிகம் வசிக்கும் தென் கர்நாடகத்தின் சில மாவட்டங்களில் மட்டுமே பலமாக உள்ளன.

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. ஜனதா தளம்(எஸ்) கட்சியின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. காங்கிரசை சேர்ந்த தரம்சிங் முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார். ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவராக இருந்த சித்தராமையா துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

இந்த கூட்டணி ஆட்சி 2 ஆண்டுகள் நீடித்த நிலையில் 2006-ம் ஆண்டு கர்நாடக அரசியலில் திடீரென புரட்சி ஏற்பட்டது. ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் குமாரசாமி தலைமையில் தனி அணியாக செயல்பட்டு பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தனர். இதனால் தரம்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் விருப்பத்திற்கு மாறாக குமாரசாமி பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து முதல் முறையாக முதல்-மந்திரி ஆனார்.

ஆளுக்கு 2½ ஆண்டுகள் என ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி முதலில் குமாரசாமி முதல்-மந்திரி பதவியை அலங்கரித்தார். 2½ ஆண்டுகளுக்கு பிறகு அவர் ஆட்சியை பா.ஜனதாவுக்கு விட்டுக்கொடுத்தார். அக்கட்சி தலைவர் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். ஆனால் குமாரசாமி உரிய ஒத்துழைப்பு வழங்காததால், எடியூரப்பா ஒரே வாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி முறிந்தது.

இந்த நிலையில் தற்போது 2-வது முறையாக பா.ஜனதாவுடன் ஜனதா தளம்(எஸ்) கைகோர்த்துள்ளது. பா.ஜனதாவும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் மாறுபட்ட கொள்கையை கொண்டதாக இருந்தாலும் அவற்றை மறந்து கூட்டணி அமைத்துள்ளன. தேவேகவுடா பா.ஜனதாவின் கொள்கைகளை தொடக்கம் முதலே கடுமையாக எதிர்த்து வந்துள்ளார். ஆனால் தற்போது அதே பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story