தேர்தல் செலவுக்கு ரூ.508 கோடி கைமாறியதா? சத்தீஸ்கார் முதல்-மந்திரி மீது பரபரப்பு குற்றச்சாட்டு


தேர்தல் செலவுக்கு ரூ.508 கோடி கைமாறியதா? சத்தீஸ்கார் முதல்-மந்திரி மீது பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 Nov 2023 8:41 AM GMT (Updated: 4 Nov 2023 9:32 AM GMT)

மகாதேவ் செயலியின் உரிமையாளர்கள் சவுரவ் சந்திராகா், ரவி உப்பால் உள்பட 14 பேருக்கு எதிராக சமீபத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ராய்ப்பூர்:

சத்தீஸ்கார் மாநிலத்தில் வரும் 7ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் மீதான குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளர்களிடம் இருந்து முதல்-மந்திரி பூபேஷ் பாகேலுக்கு பல கோடி ரூபாய் கைமாறி இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

மகாதேவ் செயலி உரிமையாளர்கள் மூலம் தேர்தல் செலவுகளுக்காக அதிக அளவில் பணம் கொண்டு செல்லப்படுவதாக உளவுத்துறை மூலம் அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பிலாயில் உள்ள ஒரு ஓட்டல் உள்ளிட்ட 2 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

'அசிம்தாஸ் என்ற இடைத்தரகா், ரூ.5.39 கோடி ரொக்கப் பணத்துடன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இது, தோ்தல் செலவுகளுக்காக காங்கிரஸ் கட்சிக்கு மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளா்களால் அனுப்பப்பட்ட பணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தாஸிடம் நடத்தப்பட்ட விசாரணையும் அவரது கைப்பேசியில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் பகுப்பாய்வும் சத்தீஸ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளுக்கு வழி வகுத்துள்ளன. அவருக்கு இதுவரை ரூ.508 கோடி கைமாறியிருப்பதாக தெரியவருகிறது. இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாதேவ் சூதாட்டச் செயலியால் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணம், பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சமாக பகிரப்பட்டதாக அமலாக்கத் துறை ஏற்கனவே விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், செயலியின் உரிமையாளர்கள் சவுரவ் சந்திராகா், ரவி உப்பால் உள்பட 14 பேருக்கு எதிராக சமீபத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மகாதேவ் செயலியின் சில பினாமி வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.15.59 கோடியை சட்டவிரோத பரிவா்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட அசிம் தாஸ், ராய்ப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story