பிரதமர் மோடி-ஜின்பிங் சந்திப்பில் எல்லை நிலவரம் பேசப்பட்டதா? - ப.சிதம்பரம் கேள்வி; பா.ஜனதா எதிர்ப்பு


பிரதமர் மோடி-ஜின்பிங் சந்திப்பில் எல்லை நிலவரம் பேசப்பட்டதா? - ப.சிதம்பரம் கேள்வி; பா.ஜனதா எதிர்ப்பு
x

கோப்புப்படம்

இந்தோனேசியாவில் நடந்த பிரதமர் மோடி-ஜின்பிங் சந்திப்பின்போது எல்லை நிலவரம் பேசப்பட்டதா என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார். அதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்தது.

புதுடெல்லி,

மாநிலங்களவையில், துணை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அதில், காங்கிரஸ் உறுப்பினர் ப.சிதம்பரம் பேசியதாவது:-

இந்தோனேசியாவில் பாலி தீவில் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் உரையாடும் வீடியோவை பார்த்தேன். அப்போது, இந்திய-சீன எல்லை நிலவரம் குறித்து பேசப்பட்டதா?

இவ்வாறு ப.சிதம்பரம் கூறியதற்கு பா.ஜனதா எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். துணை மானிய கோரிக்கை விவாதத்தை அவர் திசைதிருப்புவதாக குற்றம் சாட்டினர். இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. பா.ஜனதா உறுப்பினர் நரசிம்மராவ், 110-வது விதியின்கீழ் ஆட்சேபனை தெரிவித்தார்.

வீடியோவை அளியுங்கள்

சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர், ''அந்த வீடியோவை சபையில் பிறகு தாக்கல் செய்யுங்கள்'' என்று ப.சிதம்பரத்தை கேட்டுக்கொண்டார். ப.சிதம்பரம் தொடர்ந்து பேசியதாவது:-

துணை மானிய கோரிக்கையில், வடகிழக்கு எல்லைப்புற சாலைகள் அமைப்பதற்கு ரூ.500 கோடி ஒதுக்குவதும் அடங்கும். எனவே, விவாத பொருளில்தான் நான் பேசுகிறேன்.

மோடியும், ஜின்பிங்கும் என்ன பேசினார்கள் என்று என்னிடம் சொல்ல வேண்டாம். அவர்களது பேச்சில் எல்லை நிலவரம் இடம்பெற்றதா என்பதை மட்டும் அறிய விரும்புகிறேன்.

ரோந்து

இந்திய-சீன எல்லையில் இரு நாட்டு படைகளும் ரோந்து செல்லக்கூடாத பகுதிகளை அறிவித்து இருக்கிறீர்கள். அதாவது, இதுவரை இந்திய படைகள் ரோந்து சென்ற பகுதியில் இனிமேல் ரோந்து செல்லாது என்று அர்த்தமா?

துணை மானிய கோரிக்கையில், ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் கோடி கூடுதல் செலவினத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் கோருகிறது. அந்த பணத்தை எங்கிருந்து அரசு திரட்டும்? ஏற்கனவே பணம் உள்ளதா? அல்லது கடன் வாங்குமா? அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகமாக இருக்கும் என்று கருதுகிறதா?

கார்ப்பரேட்

தாராளமயமாக்கலுக்கு பிறகு, மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் ஒவ்வொரு 10 ஆண்டிலும் இருமடங்காக உயர்ந்துள்ளது. அப்படியானால், மோடி அரசு 10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தி இருமடங்காக உயர்ந்து இருக்குமா?

மொத்த வரி வருவாயில், கார்ப்பரேட் வரியின் பங்களிப்பு 34 சதவீதத்தில் இருந்து 26.1 சதவீதமாக குறைந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்த சலுகை ஏன்? அப்படியானால் மீதி 8 சதவீதத்தை சாமானிய மக்கள்தான் செலுத்துகிறார்களா?

கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏன் முதலீடு செய்வதில்லை? மத்திய நிதி மந்திரி வேண்டுகோள் விடுக்க வேண்டிய நிலை இருப்பது ஏன்? என்று அவர் பேசினார்.

ரூ.2½ லட்சம் கோடி திட்டங்கள்

மாநிலங்களவை கேள்வி நேரத்தில் ராணுவ இணை மந்திரி அஜய் பட் கூறியதாவது:-

கடந்த 3 ஆண்டுகளில், ஆயுதப்படைகளுக்கான மூலதன கொள்முதல் பிரிவுகளின்கீழ், ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் கோடி மதிப்புள்ள 163 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாட்டு நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்வது அதிகரித்து வருகிறது என்று அவர் கூறினார்.


Next Story