நமது நாட்டிற்கு பிரதமர் மோடி சுதந்திரம் வாங்கி கொடுத்தாரா?; கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கேள்வி


நமது நாட்டிற்கு பிரதமர் மோடி சுதந்திரம் வாங்கி கொடுத்தாரா?; கர்நாடக  காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கேள்வி
x

நமது நாட்டிற்கு பிரதமர் மோடி சுதந்திரம் வாங்கி கொடுத்தாரா? என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கேள்வி கேட்டுள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் போராட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-

தவறு நடக்கவில்லை

அமலாக்கத்துறையாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த விசாரணை அமைப்பாக இருந்தாலும் சரி சோனியா காந்தி, ராகுல் காந்தியை ஒன்றும் செய்ய முடியாது. இது தான் காங்கிரசின் கட்சியின் பலம். நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்தது காங்கிரஸ். நாம் அனைவரும் காங்கிரஸ் குடும்பத்தின் குழந்தைகள். எனக்கும் அமலாக்கத்துறை, திகார் சிறை போன்றவை குறித்த அனுபவம் உள்ளது.

நாங்கள் சோனியா காந்தியுடன் உள்ளோம் என்பதை தெரிவிக்கவே இந்த போராட்டத்தை நடத்துகிறோம். நாம் நடத்தும் இந்த போராட்டம் நாட்டிற்காக மேற்கொள்கிறோம். நான் திகார் சிறையில் இருந்தபோது சோனியா காந்தி என்னை நேரில் வந்து சந்தித்து 1½ மணி நேரம் பேசி எனக்கு பலம் கொடுத்தார். நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தில் எந்த தவறும் நடைபெறவில்லை என்று தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை மற்றும் அப்போது நிதி மந்திரியாக இருந்த அருண்ஜெட்லி என்று கூறினர்.

போராட்டம் ஓயாது

ஆனால் இப்போது அமலாக்கத்துறையில் அந்த வழக்கை மீண்டும் விசாரிக்கிறார்கள். நமது நாட்டிற்கு பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் சுதந்திரம் வாங்கி கொடுத்தார்களா?. நாளை (இன்று) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சியை விரட்டி அடிக்கும் வரை காங்கிரசின் போராட்டம் ஓயாது.

என் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. சிறைக்கு சென்று வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது அமலாக்கத்துறையினர் மீண்டும் எனக்கு நோட்டீசு அனுப்புகிறார்கள். அவர்கள் எனக்கு அடிக்கடி காதல் கடிதம் அனுப்புகிறார்கள். நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்வோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.


Next Story