அதானியின் விமானம் பயன்படுத்தினாரா பிரதமர் மோடி? ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க.வின் பதில்...


அதானியின் விமானம் பயன்படுத்தினாரா பிரதமர் மோடி? ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க.வின் பதில்...
x
தினத்தந்தி 8 Feb 2023 2:47 PM IST (Updated: 8 Feb 2023 3:03 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு உரிய அனைத்து சான்றுகளையும் அவர் அளிக்க வேண்டும் என பா.ஜ.க. கூறியுள்ளது.



புதுடெல்லி,


நாட்டில் பிரபல தொழிலதிபரான அதானி முறைகேடு செய்துள்ளார் என ஹிண்டன்பர்க் அறிக்கை பரபரப்பு குற்றச்சாட்டுகளை வெளியிட்டது. இதன் எதிரொலியாக, கடந்த சில நாட்களுக்கு முன் பங்கு வர்த்தகத்தில் அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்தன.

இந்நிலையில், இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறைவு செய்த பின்னர், நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி, தொழிலதிபர் அதானியின் சொத்துகளின் வானளாவிய அதிகரிப்புக்கு மோடி அரசே காரணம் என்ற பொருளில் குற்றம் சாட்டி பேசினார். இதற்கு பா.ஜ.க. தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அக்கட்சியின் மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நாட்டின் நற்பெயரை களங்கப்படுத்திய மிகப்பெரிய ஊழல்கள் அனைத்திலும் காங்கிரஸ் தலைவர்கள்தான் ஈடுபட்டுள்ளனர். எனவே, ராகுல் காந்தி, ஊழல் குறித்த தனது நினைவுத்திறனை தட்டி எழுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது.

ராகுல் காந்தி, அவருடைய தாய் சோனியா காந்தி, மைத்துனர் ராபர்ட் வதேரா ஆகியோர் ஜாமீனில் உள்ளனர். ஊழல் செய்வதும், ஊழல்வாதிகளை பாதுகாப்பதும்தான் ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தின் சரித்திரம் என கூறினார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ஆய்வு செய்யப்படாத, குற்றஞ்சாட்டக்கூடிய மற்றும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் சில விசயங்களை பேசியதற்காக, அவருக்கு எதிராக பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே மக்களவையில் இன்று உரிமை மீறல் நோட்டீஸ் அளித்து உள்ளார்.

பிரதமர் மோடியால் அதானியின் விமானம் பயன்படுத்தப்பட்டது என யாராவது நிரூபித்தால் பதவி விலக தயார் என்றும் கூறினார்.

இதுபற்றி நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் பேசிய பா.ஜ.க. எம்.பி., பிரதமருக்கு எதிராக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு உரிய அனைத்து சான்றுகளையும் அவர் கொடுக்க வேண்டும்.

அப்படி இல்லையென்றால், உரிமை மீறல் நோட்டீசின் கீழ் அவர் உறுப்பினர் அந்தஸ்து இழக்க நேரிடும். பிரதமர் மோடி, பிரதமராக ஆனபின்னர், அதானியின் விமானம் ஒருபோதும் பயன்படுத்தியதில்லை.

எம்.பி.க்களாக இருந்து விட்டால், அவர்களுக்கு எந்தவித உரிமையும் உண்டு என்றால், அவர்களுக்கு கடமைகளும் உள்ளன. அவையில் ஒருவர் இல்லையென்றால் அவரது பெயரை பற்றி பேச்செடுக்க கூடாது என்றும் பா.ஜ.க. எம்.பி. சுட்டி காட்டி பேசியுள்ளார்.


Next Story