ஒழுக்கமே ஆயுதப்படைகளின் 'ஹால்மார்க்' - சுப்ரீம் கோர்ட்டு கருத்து


ஒழுக்கமே ஆயுதப்படைகளின் ஹால்மார்க் - சுப்ரீம் கோர்ட்டு கருத்து
x

கோப்புப்படம்

ஒழுக்கமே ஆயுதப்படைகளின் ‘ஹால்மார்க்’ என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ராணுவத்தில் டிரைவராக பணியாற்றி வந்த ஒருவர், கடந்த 1998-ம் ஆண்டு நவம்பர் 8 முதல் டிசம்பர் 16-ந்தேதி வரை விடுப்பு எடுத்திருந்தார். பின்னர் மேலும் 30 நாட்கள் விடுப்பு பெற்ற அவர், அதன் பிறகும் பணியில் சேரவில்லை. தனது மனைவிக்கு உடல் நலமில்லை எனக்கூறி தானாகவே விடுப்பை நீட்டித்தார்.

இவ்வாறு அவர் அடிக்கடி விடுப்பை நீட்டித்து வந்ததால் அவர் மீது விசாரணை நடத்திய ராணுவம் அவரை பணியில் இருந்து நீக்கியது. இதைத்தொடர்ந்து ராணுவ வீரர் சுப்ரீம் கோர்ட்டை நாடினார். இந்த வழக்கை நீதிபதிகள் ஹிமா ஹோலி, ராஜேஷ் பிண்டால் அமர்வு விசாரித்தது.

அப்போது, ராணுவ வீரர் தனது மனைவியின் மருத்துவ சான்றிதழோ அல்லது சிகிச்சை விவரங்களையோ தாக்கல் செய்யவில்லை எனக்கூறியும், அவர் தொடர்ந்து இதைப்போல விடுப்பு எடுத்து வருவதையும் சுட்டிக்காட்டி அவரது மனுவை தள்ளுபடி செய்தனர்.

தீர்ப்பின்போது நீதிபதிகள் கூறுகையில், 'ஒழுக்கமே ராணுவ வீரர்களின் ஹால்மார்க் (அடையாளம்). இதில் சமரசத்துக்கே இடமில்லை என்பதை ராணுவ வீரர் கவனத்தில் கொள்ள வேண்டும்' என தெரிவித்தனர்.


Next Story