காஷ்மீரை விட அதிக அளவிலான லித்தியம் இருப்பு கண்டுபிடிப்பு; ராஜஸ்தான் அரசு


காஷ்மீரை விட அதிக அளவிலான லித்தியம் இருப்பு கண்டுபிடிப்பு; ராஜஸ்தான் அரசு
x

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கண்டறியப்பட்ட 59 லட்சம் டன் லித்தியம் இருப்பை விட அதிக அளவிலான லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என ராஜஸ்தான் அரசு தெரிவித்து உள்ளது.

ஜெய்ப்பூர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் சமீபத்தில் லித்தியம் என்ற தாது பொருள் இருப்பு கண்டறியப்பட்டது. ஆய்வில் அவை 59 லட்சம் டன் இருக்கும் என மதிப்பிடப்பட்டது. இந்த நிலையில், ராஜஸ்தானிலும் லித்தியம் இருப்பு தற்போது கண்டறியப்பட்டு உள்ளது.

இதுபற்றி ராஜஸ்தானின் சுரங்க மந்திரி பிரமோத் பய்யா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, எங்களுடைய மாநிலத்தில் லித்தியம் கண்டறியப்பட்டது எங்களது அதிர்ஷ்டம். இந்த முறை, எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவிற்கு நிறைய ஆய்வுகளை செய்வதில் முதல்-மந்திரியின் முதன்மையான கவனம் இருக்கும்.

நகாவர் பகுதியில் கண்டறியப்பட்ட லித்தியம் இருப்பு, ஜம்மு மற்றும் காஷ்மீரில் கண்டறியப்பட்ட இருப்பை விட அதிகம் என அவர் கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் சலால்-ஹைமனா பகுதியில் இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில், 59 லட்சம் டன் லித்தியம் தாது பொருட்கள் இருப்பு உள்ளது தெரிய வந்தது. நாட்டில் முதன்முறையாக கண்டறியப்பட்ட இந்த தகவலை மத்திய அரசும் உறுதி செய்தது.

இந்த உலோகம் மின் வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தியில் பயன்படும். உலகில் 50 சதவீதத்திற்கு கூடுதலான லித்தியம் ஆஸ்திரேலியாவிடம் இருந்து கிடைக்க பெறுகிறது. மொத்தம் கிடைக்க கூடிய லித்தியத்தில் 18 சதவீதம் மட்டுமே பயன்பாட்டுக்கு உரியவையாக உள்ளன.

உலகில் பொலிவியா நாட்டின் சலார் டே உயுனி பகுதியில் மிக பெரிய அளவில் லித்தியம் இருப்பு அமைந்து உள்ளது. எனினும், அரசு விதிகளின்படி சுரங்கம் தோண்டுதல் அந்நாட்டில் தடை செய்யப்பட்டு உள்ளது.

இந்த சூழலில், இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் ராஜஸ்தானில் அதிக அளவிலான லித்தியம் இருப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. உலக பொருளாதாரத்தில் டாப் 5 இடத்தில் உள்ள இந்தியா, 3-வது இடம் நோக்கி முன்னேற வேண்டும் என்ற இலக்குடன் அரசு செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் லித்தியம் இருப்பு கண்டறியப்பட்டு உள்ள தகவல் தெரிய வந்து உள்ளது. இதனால், இந்த தாது பொருட்களுக்காக வெளிநாட்டை சார்ந்திருப்பது குறையும்.


Next Story