இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம்: ஒருங்கிணைப்பாளராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்படுவாரா..?


இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம்: ஒருங்கிணைப்பாளராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்படுவாரா..?
x

கோப்புப்படம்

தினத்தந்தி 3 Jan 2024 11:10 PM GMT (Updated: 4 Jan 2024 6:52 AM GMT)

இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

பாட்னா,

இந்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

இதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட 25-க்கு மேற்பட்ட கட்சிகள் இணைந்து பிரமாண்ட கூட்டணி அமைத்து உள்ளன. இதற்கு 'இந்தியா' என்ற பெயரும் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டணியின் தலைவர்கள் 4 முறை கூடி தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளனர். இதன் கடைசி கூட்டம் கடந்த மாதம் டெல்லியில் நடந்தது.

இதில் தொகுதி பங்கீடு, கூட்டு தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் கூட்டணியின் அடுத்த ஆலோசனை கூட்டம் எப்போது நடைபெறும்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்தப்படும் என்றும் சில ஊடகங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த கூட்டணி தலைவர்களில் ஒருவரும், பீகார் மாநில துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் நேற்று பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் எப்போது? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், 'இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டத்துக்கான தேதி மற்றும் நடைமுறைகள் குறித்து தலைவர்களிடையே ஆலோசனை நடந்து வருகிறது. இதில் முடிவு எடுத்தவுடன் அனைவருக்கும் தெரியப்படுத்தப்படும்' என்று கூறினார்.

இந்த சூழலில் இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story