தொடர் அமளி: எம்.பி.க்களுக்கு தங்கார் எச்சரிக்கை; ராஜ்யசபை மார்ச் 13-ந்தேதி வரை ஒத்தி வைப்பு
அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற மேலவை வருகிற மார்ச் 13-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மேலவை இன்று கூடியதும் அதானி விவகாரம் பற்றி விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மேலவை இன்று 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது. இதன்படி காலை 11.50 மணியளவில் முதலில் அவை ஒத்திவைப்பு அறிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர்களின் பல்வேறு நோட்டீஸ்களை ஏற்க தங்கார் மறுத்ததும், அவையின் மைய பகுதிக்கு வந்து உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.
முதன்முறையாக அவை ஒத்தி வைக்கப்படுவதற்கு முன்பு, அவையின் தலைவர் ஜகதீப் தங்கார், பல்வேறு எம்.பி.க்களின் பெயரை குறிப்பிட்டார்.
இதன்படி எம்.பி.க்கள் ராகவ் சத்தா, இம்ரான் பிரதாப்கார்ஹி, சக்தி சின்ஹ் கோஹில், குமார் கேத்கர் மற்றும் சந்தீப் பதக் ஆகியோரது பெயரை அவர் குறிப்பிட்டு, இதுபோன்ற அவை நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படுத்த கூடாது என எச்சரிக்கை விடுத்து பேசினார்.
2-வது முறையாக அவை தொடங்கியதும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை தேவை என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால், அவையில் மீண்டும் கூச்சலும், குழப்பமும் நிலவியது.
இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற மேலவை வருகிற மார்ச் 13-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி வருகிற மார்ச் 13-ந்தேதி நடைபெறும்.
இதுபற்றி அவையில் தங்கார் கூறும்போது, திட்டமிட்டே உள்நோக்குடன் அவையை முடக்கும் நடவடிக்கைகள் நடக்கின்றன. அவையை நடத்துவதற்கான வழி இதுவல்ல.
ஏற்கனவே நாம் நிறைய நேரம் வீணடித்து விட்டோம். இதுபோன்ற இடையூறுகள் அவையில் ஏற்பட்டால், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு நான் ஆளாவேன் என கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் கார்கேவை பற்றி தங்கார் குறிப்பிடும்போது, அவையில் உங்களுக்கான உரிமையை நீங்கள் இழக்கின்றீர்கள். ஒவ்வொரு முறையும் நெருக்கடிக்கு உட்பட்டு அவை தலைவர் செயல்படுகிறார் என கூறி வருகின்றீர் என கூறினார்.