மேகதாது திட்டத்தை அமல்படுத்த துரித நடவடிக்கை; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேச்சு
பெங்களூருவின் குடிநீர் பிரச்சினைக்கு தீா்வு காண மேகதாது திட்டத்தை அமல்படுத்த துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவின் குடிநீர் பிரச்சினைக்கு தீா்வு காண மேகதாது திட்டத்தை அமல்படுத்த துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
வளர்ச்சிக்கு அடித்தளம்
கர்நாடக அரசின் கன்னட வளா்ச்சித்துறை சாா்பில் கெம்பேகவுடா ஜெயந்தி விழா பெங்களூரு விதான சவுதாவில் உள்ள விருந்தினர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-
அனைத்து தரப்பு மக்களும் சமமாக வாழும் வகையில் ஆட்சி நிர்வாகத்தை நடத்தியவர் கெம்பேகவுடா. பெங்களூருவின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தார். கெம்பேகவுடா ஜெயந்தியை பெங்களூருவில் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் கொண்டாட வேண்டும். மாநில அளவிலான கெம்பேகவுடா ஜெயந்தி விழா ஹாசனில் நடத்தப்பட்டுள்ளது.
நாம் மறக்கக்கூடாது
நாளை (இன்று) முதல் வருகிற 5-ந் தேதி வரை பெங்களூருவில் அனைத்து வார்டுகளிலும் கெம்பேகவுடா ஜெயந்தி விழாவை நடத்தி சமூக சேவகர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்க வேண்டும். கெம்பேகவுடா ஒக்கலிகர் சமூகத்திற்கு மட்டுமே சேர்ந்தவர் என்று சொல்வதை நான் ஏற்கவில்லை. அவர் ஒக்கலிகர் சமூகத்தில் பிறந்திருந்தாலும், அவர் கர்நாடகத்தின் சொத்து, நமது தேசத்தின் சொத்து. இதை நாம் மறக்கக்கூடாது.
பெங்களூருவின் வளர்ச்சிக்கு நான் நேர்மையான முறையில் முயற்சி செய்து வருகிறேன். இதற்கு ஒவ்வொருவரின் ஒத்துழைப்பு, ஆலோசனை தேவை. எங்களுக்கு எதிராக எவ்வளவு விமா்சனங்களை கூறினாலும், நாங்கள் அதுபற்றி கவலைப்பட மாட்டோம். மக்களுக்கு சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும் என்பது எங்களின் நோக்கம்.
போக்குவரத்து நெரிசல்
பெங்களூருவில் துணை நகரங்கள் அமைக்கப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கு தனியாக ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும். மனிதர்களின் குணங்களில் நம்பிக்கை மிகவும் சிறந்த குணம். மக்கள் அந்த நம்பிக்கையை எங்கள் மீது வைத்துள்ளனர். பெங்களூருவுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். இதற்காக மேகதாது திட்டத்தை அமல்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அத்துடன் குப்பை கழிவுகள் பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.
இதில் ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி, முன்னாள் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.