சித்தராமையா, டி.கே.சிவக்குமார்; கர்நாடக புதிய முதல்-மந்திரி யார்? காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் இன்று நடக்கிறது


சித்தராமையா, டி.கே.சிவக்குமார்; கர்நாடக புதிய முதல்-மந்திரி யார்? காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் இன்று நடக்கிறது
x

பெங்களூருவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா தேர்ந்தெடுக்கப்படுவரா? அல்லது டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்படுவரா? என்பது தெரியவரும்.

கடும் போட்டி

கர்நாடக காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. சித்தராமையாவுக்கு தற்போது 75 வயதாகிறது. அதனால் இது எனது கடைசி தேர்தல் என்று அவர் ஏற்கனவே அறிவித்துவிட்டார். அதனால் இந்த முறை தனக்கு முதல்-மந்திரி பதவி வேண்டும் என்பதில் சித்தராமையா உறுதியாக உள்ளார்.

ஆனால் டி.கே.சிவக்குமார், பா.ஜனதாவின் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் தான் கட்சியை பலப்படுத்தி இருப்பதாகவும், அதனால் முதல்-மந்திாி பதவிக்கு தன்னை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கட்சி மேலிடத்திடம் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த 2 பேரின் ஆசை ஒரு பக்கம் இருக்க, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் விருப்பம் என்ன என்பது முக்கியமான அம்சமாக உள்ளது. ஏனெனில் கடந்த 2013-ம் ஆண்டு காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றபோது, கட்சி எம்.எல்.ஏ.க்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே முதல்-மந்திரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதாவது, அப்போது முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையாவுக்கும், தற்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவராக உள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது.

எம்.எல்.ஏ.க்கள் வாக்கெடுப்பு

இதையடுத்து கதவுகள் மூடப்பட்ட அறைக்குள் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் சித்தராமையாவுக்கு அதிக எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் கிடைத்ததால், அவரே முதல்-மந்திரியாக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் இந்த முறையும் முதல்-மந்திரி யார் என்பது குறித்து சித்தராமையா-டி.கே.சிவக்குமாரை முன்னிறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால், அதில் சித்தராமையாவே வெற்றி பெறுவார் என்று உறுதியாக சொல்லப்படுகிறது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நடக்கிறது. ஒருவேளை சித்தராமையா முதல்-மந்திரியாக தேர்வானால், டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்-மந்திரி பதவி கிடைப்பது உறுதி. சித்தராமையா அனைத்துதரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவராக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் குருபா சமூகத்தை சேர்ந்தவர் ஆவர்.


Next Story