தவறுதலாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி: திரும்ப பெறப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவு


தவறுதலாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி: திரும்ப பெறப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 14 Dec 2023 2:02 PM GMT (Updated: 14 Dec 2023 2:18 PM GMT)

நாடாளுமன்றத்திற்குள் நடந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவைக்குள் நேற்று அத்துமீறி நுழைந்த வாலிபர்கள், வண்ணப் புகைக்குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாளில் அரங்கேறிய இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பாதுகாப்பு பணியாளர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஜனநாயக கோவிலாக கருதப்படும் நாடாளுமன்றத்திற்குள் நடந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. தொடர்ந்து ஏற்பட்ட கடும் அமளி காரணமாக மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக கனிமொழி, பி.ஆர்.நடராஜன், கே.சுப்பராயன், எஸ்.ஆர்.பார்த்திபன், சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகிய தமிழ்நாடு எம்.பி.க்கள் உள்ளிட்ட 14 பேரும், மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. உடல் நலக்குறைவால் விடுமுறை எடுத்துள்ளதாகவும், ஆனால் அவரையும் தவறுதலாக சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனைத்தொடர்ந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் இருந்து அவரது பெயர் நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, ஒரு எம்.பி.யின் பெயரைச் சேர்த்தது தவறு என்றும், தவறாக அடையாளம் காணப்பட்டது என்றும், தவறாக இடம்பெற்ற எம்.பி.யின் பெயரை நீக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அந்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் பெயர்களில் இடம்பெற்ற எஸ்.ஆர்.பார்த்திபன் மக்களவைக்கு வரவே இல்லை (அவர் சென்னையில் இருக்கிறார்) என்று தி.மு.க. எம்.பி.க்கள் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story