ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்பு!
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்றுள்ளார்.
சண்டிகர்,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் அவர் நடத்தி வரும் இந்த யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது.
தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை கடந்து தற்போது அரியானாவில் இந்த யாத்திரை நடந்து வருகிறது. ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை கடந்த வெள்ளிக்கிழமை 100-வது நாளை எட்டியது.
இதனை தொடர்ந்து இன்றும் மீண்டும் பாதயாத்திரை தொடங்கியது. இந்த பாதயாத்திரையில் ராகுல் காந்தியுடன் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டு ராகுலுடன் நடந்து சென்றார். மேலும் அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, மூத்த தலைவர்கள் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, குமாரி செல்ஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாதயாத்திரை நாளை (சனிக்கிழமை) டெல்லிக்குள் நுழைகிறது. ஆனால் நாட்டில் ஒமைக்ரானின் துணை மாறுபாடு வைரஸ் பரவல் கண்டறியப்பட்டு உள்ளதால் இந்த பாதயாத்திரையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறும், அது முடியாவிட்டால் யாத்திரயை ரத்து செய்யுமாறும் ராகுல் காந்திக்கு மத்திய சுகாதார மந்திரி கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.