குஜராத் தேர்தல் பிரதமர் மோடிக்கும் காங்கிரசுக்கும் இடையேயான போட்டியாக மாறக்கூடாது: காங். தலைமை அறிவுறுத்தல்

பிரதமர் மோடி மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தக்கூடாது என முடிவு செய்யப்பட்டது.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என, காங்கிரஸ் கட்சியின் குஜராத் பிரிவுக்கு, காங்கிரஸ் மேலிட தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தேர்தலுக்கான வியூகத்தை வகுப்பதற்காக அமைக்கப்பட்ட காங்கிரஸின் செயற்குழு, விரைவில் நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகம் குறித்து விவாதிக்க, காங்கிரஸ் கட்சியின் குஜராத் பிரிவு தலைவர்களுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தியது.
காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம், ரந்தீப் சுர்ஜேவாலா, அஜய் மக்கன், ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக், சுனில் கனுகோலு ஆகியோர் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது.
நான்கரை மணி நேரத்துக்கும் மேலாக நடந்த கூட்டத்தில், பிரதமர் மோடி மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தக்கூடாது என முடிவு செய்யப்பட்டது. எனினும், சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, கடந்த, 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர், 'சாய்வாலா-(டீ கடைக்காரர்)' என்று பிரதமர் மோடியை பார்த்து குறிப்பிட்டு பேசியதும், 2017 குஜராத் தேர்தலின் போது பிரதமர் மோடிக்கு எதிராக "நீச் ஆத்மி-(தாழ்ந்த மனிதன்)" என்ற காங்கிரசின் கருத்து மற்றும் சோனியா காந்தியின் "மௌத் கா சவுதாகர்-(பிறர் வாழ்க்கையோடு விளையாடுபவர்)" என்ற கருத்து ஆகியவை காங்கிரஸை பின்னுக்கு தள்ளியது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக இந்த அறிக்கைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தியதால் இந்த கருத்துகள் காங்கிரஸை பின்னுக்கு தள்ளின.
கடந்த தேர்தல் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளதால், குஜராத் அரசின் தோல்விகள், தலித்துகள், விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் பிரச்னைகள் உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி, குஜராத் மாநிலத்தை மையமாக வைத்து காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்ய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பஞ்சாபில் அமோக வெற்றி பெற்று குஜராத்தில் களமிறங்கும் நோக்கத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சி, புதிதாக நுழைந்துள்ள நிலையில், குஜராத்தில் இம்முறை சட்டப்பேரவைத் தேர்தல் மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியை "பாஜகவின் பி டீம்" என்று தாக்கி பேச வேண்டும் என்றும் காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு செய்ய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2017 குஜராத் சட்டசபை தேர்தலில், 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்தில் பாஜக 99 இடங்களைக் கைப்பற்றியது. அதே நேரத்தில் 77 இடங்களை வென்று காங்கிரஸ் தனது எண்ணிக்கையை மேம்படுத்தியது குறிப்பிடத்தக்கது.