ஏழைகளுக்கான நல திட்டங்களை இலவச பரிசுகள் என அழைக்க வேண்டாம்: பா.ஜ.க.வுக்கு கவிதா எம்.எல்.சி. வேண்டுகோள்


ஏழைகளுக்கான நல திட்டங்களை இலவச பரிசுகள் என அழைக்க வேண்டாம்:  பா.ஜ.க.வுக்கு கவிதா எம்.எல்.சி. வேண்டுகோள்
x

ஏழைகளுக்கான நல திட்டங்களை இலவச பரிசுகள் என அழைக்க வேண்டாம் என பா.ஜ.க.வை வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன் என எம்.எல்.சி. கே. கவிதா கூறியுள்ளார்.



ஐதராபாத்,



பிரதமர் மோடி அரசு திட்டம் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, இலவசங்களை வழங்குவோம் என கூறி தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதிகளை அளிப்பது இனிப்பு கலாசாரம் என குறிப்பிட்டார். நாட்டில் வளர்ந்து வரும் இது போன்ற விசயங்கள் ஆபத்து தருபவை என கூறினார்.

எனினும், அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி, ஏழை மக்களுக்கு இலவச சுகாதார சேவை வழங்குவது என்பது இலவசத்தில் வராது என இதற்கு பதிலளிக்கும் வகையில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறினார்.

அனைத்து அரசாங்கங்களும், ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச கல்வி, தனிநபருக்கு இலவச சிகிச்சை, குடும்பத்துக்கு 300 யூனிட் இலவச மின்சாரம், வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு அலவன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். அதற்கு எடுத்துக்காட்டாக உலக நாடுகளையும் ஒப்பீடு செய்து பேசியுள்ளார்.

இந்த நிலையில், தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியின் எம்.எல்.சி. கே. கவிதா இன்று பேசும்போது, இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் பெரும்பான்மையோர் ஏழைகளாக உள்ளனர். மத்திய அரசு அல்லது மாநில அரசுகளாக இருக்கட்டும்.

ஒவ்வோர் அரசும் அவர்களுக்காக நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், ஏழைகளுக்கான நல திட்டங்களை, இலவச பரிசுகள் என அழைத்து அதுபோன்றதொரு சூழலை மத்தியில் ஆளும் பா.ஜ.க. உருவாக்கி கொண்டிருக்கிறது.

நல திட்டங்களை இலவச பரிசுகள் என அழைக்க வேண்டாம் என பா.ஜ.க.வை நான் வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன். மத்திய அரசோ அல்லது மாநில அரசுகளோ அது அவர்களது கடமையுடன் கூடிய பொறுப்பு ஆகும்.

ஏழைகளை புண்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும். அவை இலவசங்கள் அல்ல. மாநில அரசுகளின் நல திட்டங்களுக்கு ஆதரவு தெரிவியுங்கள். அவர்களை ஆதரிக்க நீங்கள் விரும்பவில்லை என்றாலும், அதற்கான சுதந்திரம் அவர்களுக்கு அளியுங்கள். அதனால், நல திட்டங்களை அவர்கள் தொடர முடியும் என கூறியுள்ளார்.

இதுபோன்ற ஒரு சூழலை உண்டு பண்ணி, திட்டங்களை மாநில அரசுகளே நிறுத்துவதற்காக கட்டாயப்படுத்த நீங்கள் முயலும் விதம் சரியல்ல. அது ஏழைகளுக்கு உதவாது என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story