அச்சமூட்டும் சூழலை உருவாக்க வேண்டாம்; அமலாக்க துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்


அச்சமூட்டும் சூழலை உருவாக்க வேண்டாம்; அமலாக்க துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
x

சத்தீஷ்கார் அரசுடன் தொடர்புடைய வழக்கு விசாரணை ஒன்றில் அச்சமூட்டும் சூழலை உருவாக்க வேண்டாம் என அமலாக்க துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் ஆளும் சத்தீஷ்காரில் மதுபான முறைகேடு பற்றிய வழக்குகளின் விசாரணையில் அமலாக்க துறை ஈடுபட்டு உள்ளது. இந்நிலையில், 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடந்த மதுபான ஊழல் பற்றி அமலாக்க துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதில் பல வழிகளில் ஊழல் நடந்து உள்ளது என கூறப்படுகிறது. சத்தீஷ்கார் மாநில அரசு மார்கெட்டிங் நிறுவனம் சார்பில் கொள்முதல் செய்யப்பட்ட, மதுபான பெட்டிகள் ஒவ்வொன்றிற்கும் விநியோகஸ்தர்களிடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இந்த வழக்கு பற்றிய அமலாக்க துறையின் விசாரணைக்கு எதிராக சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதனுடன் தங்களையும் சேர்த்து கொள்ளும்படி சத்தீஷ்கார் அரசு கேட்டு கொண்டது.

இதுபற்றிய விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் எஸ்.கே. கவுல் மற்றும் அமனுல்லா அமர்வு முன் வந்தது. அப்போது, சத்தீஷ்கார் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் கூறும்போது, அமலாக்க துறை கட்டுப்பாடின்றி செயல்பட்டு வருகிறது. மாநில கலால் துறை அதிகாரிகளை அச்சுறுத்தி வருகிறது என கூறினார்.

இது அதிர்ச்சி தரும் ஒரு விவகாரம் ஆகும் என்றும் அவர் கூறினார். இதற்கு அமலாக்க துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ, குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், மதுபான முறைகேடுகள் பற்றிய ஒரு விசாரணையை, விசாரணை அமைப்பு நடத்தி வருகிறது என கூறியுள்ளார்.

அப்போது சுப்ரீம் கோர்ட்டு குறுக்கிட்டு கூறும்போது, கலால் துறை அதிகாரிகளிடம் அச்சமூட்டும் சூழலை உருவாக்க வேண்டாம் என அமலாக்க துறையிடம் கேட்டு கொண்டது. இதுபோன்ற அணுகுமுறையானது, நல்ல நோக்கத்திற்கான விசயத்தின் விளைவுகள், சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் ஒன்றாகி விடுகிறது என்று தெரிவித்தது.

அமலாக்க துறையினர் தங்களை மிரட்டுகின்றனர் என்றும் குடும்ப உறுப்பினர்களை கைது செய்து விடுவோம் என அச்சுறுத்துகின்றனர் என்றும் முதல்-மந்திரியை சிக்க வைக்க முயற்சிக்கின்றனர் என்றும் பல்வேறு மாநில கலால் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் என சத்தீஷ்கார் அரசும் தனது மனுவில், குற்றச்சாட்டாக தெரிவித்து இருந்தது.


Next Story