வேலை இல்லாத இளைஞர்களுக்கு 'இரட்டை என்ஜின் அரசு என்றால் இரட்டை அடி என்று பொருள்' - ராகுல் காந்தி


வேலை இல்லாத இளைஞர்களுக்கு இரட்டை என்ஜின் அரசு என்றால் இரட்டை அடி என்று பொருள் - ராகுல் காந்தி
x
தினத்தந்தி 18 Feb 2024 7:15 PM GMT (Updated: 18 Feb 2024 7:16 PM GMT)

உத்தரபிரதேசத்தில் இன்று 3-ல் ஒரு பங்கு இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டம் என்னும் நோயால் அவதிப்பட்டு வருகின்றனர் என்று ராகுல் காந்தி கூறினார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை உத்தரபிரதேசத்தில் நடந்து வருகிறது. இந்த பயணத்தில் மாநிலத்தில் பெரும் பிரச்சினையாக இருந்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தை அவர் கையிலெடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் மத்திய- உத்தரபிரதேச மாநில அரசுகளை அவர் கடுமையாக குறைகூறி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

உத்தரபிரதேசத்தில் இன்று 3-ல் ஒரு பங்கு இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டம் என்னும் நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். மாநிலத்தில் 1½ லட்சத்துக்கு அதிகமான அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. குறைந்த கல்வித்தகுதி கொண்ட பணிகளுக்கும் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட வரிசையில் நிற்கிறார்கள்.

வேலையில்லாத இளைஞர்களுக்கு இரட்டை அரசு என்ஜின் என்றால் இரட்டை அடி என்றுதான் பொருள். முதலில், ஆட்சேர்ப்பு அறிவிப்புகள் வெளிவருவதே கனவாகவே இருக்கிறது, ஆட்சேர்ப்பு அறிவித்தால், வினாத்தாள் கசிந்துவிடும். தேர்வு நடந்தால் அதன் முடிவு தெரியாது. நீண்ட நாட்கள் காத்திருந்து முடிவு வந்தாலும், வேலையில் இணைவதை உறுதி செய்ய அடிக்கடி நீதிமன்றம் செல்ல வேண்டும்.

பல ஆண்டுகள் காத்திருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் வேலைக்கான வயது வரம்பை கடந்து விட்டனர். ராணுவம் முதல் ரெயில்வே வரை, கல்வித்துறை முதல் போலீஸ் துறை வரை இதுதான் நிலைமை. வேலை என்பது ஒரு மாணவருக்கு வருவாய் ஆதாரம் மட்டுமல்ல, தனது குடும்பத்தின் வாழ்க்கை மாற்றத்துக்கான கனவும் ஆகும். இந்த கனவு சிதைவதால் ஒட்டுமொத்த குடும்பமும் நலிவடைந்து விடுகிறது.

இளைஞர்களின் கனவுகளுக்கு நியாயம் சேர்ப்பதே காங்கிரசின் கொள்கைகள் ஆகும். அவர்களின் தவத்தை வீணாக விடமாட்டோம்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.


Next Story