மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது - மம்தா பானர்ஜி


மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது - மம்தா பானர்ஜி
x

உங்களுக்கு தைரியம் இருந்தால் வாரணாசியில் பா.ஜ.கவை தோற்கடியுங்கள் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கொல்கத்தா,

இந்தியா கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் இடம்பெற்றிருந்த நிலையில் மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி சமீபத்தில் அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து மக்களவை தேர்தலை முன்னிட்டு அவர் பாத யாத்திரையை மேற்கொண்டுள்ளார்.

வங்காளத்தில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின்போது, பீடித் தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி உரையாடி இருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி கூறியதாவது:-

காங்கிரஸ், 300-ல் 40 தொகுதிகளில் வெற்றிபெறுமா என்று கூட தெரியவில்லை. பிறகு ஏன் இவ்வளவு திமிர்? நாம் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். குறைந்தபட்சம் நீங்கள் வங்காளத்திற்கு வருவதை என்னிடம் தெரிவித்திருக்கலாம். நீங்கள் வந்தது நிர்வாகத்தின் மூலம் எனக்கு தெரிய வந்தது.

உங்களுக்கு தைரியம் இருந்தால் வாரணாசியில் பா.ஜ.கவை தோற்கடியுங்கள். நீங்கள் முன்பு வெற்றி பெற்ற இடங்களில் கூட தோல்வியடைவீர்கள்.

நாம் உத்தரபிரதேசத்தில் ஒன்றாக இல்லை. நீங்கள் ராஜஸ்தானில் வெற்றி பெறவில்லை. அந்த இடங்களை வெல்லுங்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கிறது என்று நான் பார்க்கிறேன். அலகாபாத், வாரணாசியில் வெற்றி பெறுங்கள்; நீங்கள் எவ்வளவு தைரியமான கட்சி என்று பார்ப்போம்!

இதுவரை டீக்கடை கூட செல்லாதவர்கள், தற்போது பீடித் தொழிலாளர்களுடன் அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் புலம்பெயரும் பறவைகள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story