நடத்தையில் சந்தேகம்: மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு மகனையும் கொல்ல தேடிய கணவன் - கேரளாவில் பயங்கரம்
நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் அரேங்கேறியுள்ளது.
கொல்லம்,
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியை சேர்ந்த அஜய்குமார் மற்றும் லினி தம்பதிக்கு 13 வயதில் மகன் இருந்துள்ளார். சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டெக்னீஷியனாக வேலை பார்த்த அஜய்குமார் குடும்பத்துடன் கோழிக்கோட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்த அஜய்குமார், மகனையும் கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால், மகன் பின் வாசல் வழியாக ஓடி விட்டதால், உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி கொண்டதுடன் சமையல் அறையில் இருந்த கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு, தீ வைத்துள்ளார். சில நிமிடங்களில் கணவன், மனைவி இருவரும் உடல் கருகி சடலமான கிடந்தனர்.
சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தம்பதியினரின் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய மகனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை கொலை செய்ததுடன், அஜய்குமாரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, கனவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.