வரதட்சணை கொடுமை, இயற்கைக்கு மாறான உறவு; கணவர் மீது மனைவி புகார்
மத்திய பிரதேசத்தில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து, அதனை வாங்கி வராததற்காக இயற்கைக்கு மாறான உறவுக்கு வற்புறுத்துகிறார் என கணவர் மீது மனைவி புகார் அளித்து உள்ளார்.
குவாலியர்,
மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் ராதாகிருஷ்ணா காலனியில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு 2019-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஓராண்டுக்குள் கணவரின் குடும்பத்தினர் அந்த பெண்ணிடம் வரதட்சணை வாங்கி வரும்படி கேட்டு கொடுமை செய்து உள்ளனர்.
இதன்பின்பு, அவரது கணவரும் கொடுமையின் ஒரு பகுதியாக, வரதட்சணை வாங்கி வராத மனைவியை இயற்கைக்கு மாறான உறவுக்கு வற்புறுத்தி உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பெண்ணை, அடித்து, துன்புறுத்தி உள்ளார்.
இதனால், தனது பெற்றோரிடம் அந்த பெண் நடந்த விவரங்களை கூறி உள்ளார். இதனை தொடர்ந்து, அவர்கள் போலீசில் புகார் அளித்து உள்ளனர். வரதட்சணை வாங்கி வராததற்காக இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபட்டு உள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணைக்காக அந்த நபரை தேடி சென்றுள்ளனர். ஆனால், வீட்டை பூட்டி விட்டு அந்த நபர் தப்பியோடிய விவரம் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.