பள்ளிகளில் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய பாடம் அவசியம்


பள்ளிகளில் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய பாடம் அவசியம்
x

பள்ளிக்கூடங்களில் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய பாடம் அவசியம் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் நாளுக்கு நாள் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கஞ்சா, கொகைன், எம்.டி.ஏ. போதைப்பொருள், மாத்திரைகள், போதை ஆயில்கள் மூலம் போதை ஏற்றி தன் வாழ்வை தொலைக்கும் இளைய தலைமுறையினர் அதிகரித்து வருகிறார்கள். சமீபகாலமாக அதிகரித்து வரும் குற்ற வழக்குகளில் ஈடுபடுவோரின் பின்னணி போதைப்பொருளில் வாழ்க்கை தொலைத் தவர்கள் அதிகம் என போலீசார் கூறுகிறார்கள்.

பல்வேறு மாநிலம், வெளிநாட்டினரும் அதிகளவில் வசிக்கும் பெங்களூருவில் புதுப்புது வழியில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஐ.டி. ஊழியர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை கொடிகட்டி பறக்கிறது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகிறார்கள். இருப்பினும் நாள்தோறும் பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை போலீசார் கைது செய்ததாக செய்திகள் நாளிதழ்களில் வந்த வண்ணம் உள்ளது.

போதை சாக்லெட்

கடலோர மாவட்டமான உத்தரகன்னடா, தட்சிணகன்னடா, உடுப்பி மாவட்டங்களிலும் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது. மருத்துவம் படித்த மாணவர்களும் கஞ்சாவை வாடகை வீட்டில் வளர்த்து விற்பனை செய்து போலீசில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது. சமீபத்தில் மங்களூருவில் பெட்டிக்கடைகளில் போதை சாக்லெட்டுகளை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 கிலோ போதை சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டது.

குறிப்பாக ஆந்திராவில் இருந்து தான் பெங்களூரு, மங்களூரு, மைசூரு, சிவமொக்கா உள்பட மாநிலம் முழுவதும் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாரின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. ஆனால் வலை பின்னல் தொடர்புகளை கொண்ட போதைப்பொருள் கும்பலை கட்டுப்படுத்துவது போலீசாருக்கு பெரிய சவாலாக உள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய பாடம்

இந்த நிலையில் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்த், பெங்களூரு மட்டுமின்றி மாநிலம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், இதுபற்றி பள்ளி மாணவ-மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றும், எனவே கர்நாடக அரசு பள்ளி பாட புத்தகங்களில் போதைப்பொருள் ஒழிப்பு பற்றி ஒரு பாடம் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளார்.

பள்ளி பாட புத்தகங்களில் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய பாடம் அவசியமா? என்பது பற்றி பல்வேறு தரப்பினர் கருத்து கூறியுள்ளனர்.

அதுபற்றி பார்ப்போம்...

எதிர்காலம் நாசம்

சிவமொக்காவை சேர்ந்த வாழும் கலை பயிற்சியாளர் சபரீஷ் கண்ணன் கூறுகையில், "இன்றைய இளைஞர் சமுதாயம் படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடு இல்லாமல் போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளது. இதற்கு போதிய விழிப்புணர்வும், போதைப்பொருளால் ஏற்படும் தீமை குறித்தும் அறியாமையே காரணம். இதனால் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கவும், இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் போதைப்பொருளை தடுப்பது, அதனால் ஏற்படும் தீங்குகள் குறித்தும் பாடபுத்தகத்தில் சேர்க்க வேண்டும்.

இவற்றை பள்ளி பாட புத்தகங்களில் சேர்ப்பது மிகவும் அவசியம். பள்ளி பருவத்திலேயே மதுபானம், சிகரெட், கஞ்சா உள்ளிட்ட பழக்கங்களுக்கு மாணவர்கள் அடிமையாகி வருகிறார்கள். இது அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குவதுடன் உயிருக்கே ஆபத்தாக உள்ளது. தொடக்க பள்ளியில் இருந்தே போதைப்பொருள் ஒழிப்பு குறித்து பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும்" என்றார்.

ஆரம்ப புள்ளி

சிக்கமகளூருவை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியர் சந்திரசேகரய்யா கூறுகையில், "போதை பழக்கத்தால் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. அவர்களின் எதிர்காலம் சீரழிந்து, வாழ்க்கை பாதையே மாறும் நிலை ஏற்படும். இந்த போதைப்பொருட்கள் தான் கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்களுக்கு ஆரம்ப புள்ளி. இன்றைய இளம் தலைமுறையை போதை பழக்கத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

இதுபற்றி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அவர்களுக்கு விளக்க வேண்டும். பாட புத்தகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு பாடத்தை சேர்ப்பது நல்ல விஷயம் தான். பாட புத்தகத்தில் போதைப்பொருள் பாடத்தை சேர்க்க அரசு நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்" என்றார்.

வேருடன் பிடுங்கி...

மைசூருவை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் சித்தலிங்கமூர்த்தி கூறுகையில், "பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இது கவலை அளிப்பதாக உள்ளது. போதைப்பொருளின் தீமை பற்றி அறியாமல் மாணவர்கள் அதற்கு அடிமையாகி வருகிறார்கள். இதனால் தான் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்க முக்கிய காரணம் ஆகும். போதைப்பொருளை வேருடன் பிடுங்கி எறிய வேண்டும். அதற்கு போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். இந்தியா முழுவதும் அந்தந்த மாநில மொழிகளில் போதைப்பொருள் பற்றிய பாடத்தை பள்ளி பாடப்புத்தகத்தில் ேசர்க்க வேண்டும். சிறு வயதிலேயே மாணவர்கள் போதைப்பொருளின் தீமையை தெரிந்துகொண்டால், அதனை பயன்படுத்த தயங்குவார்கள். இதன்மூலம் போதைப்பொருள் பயன்பாடு குறையும். பெரிய அளவில் மாற்றம் ஏற்படும்" என்றார்.

மைசூருவை சேர்ந்த ஆசிரியர் ரங்கராஜூ கூறுகையில், "பாலியல் கல்வி மாதிரி போதைப்பொருள் பற்றியும் பள்ளி பாடத்தில் சேர்க்க வேண்டும். போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் பற்றியும், அதனால் சமுதாயத்தில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்படும் என்பது பற்றியும் மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஸ்டைலுக்காக போதைப்பொருளை பயன்படுத்த தொடங்கும் மாணவர்கள், அதில் இருந்து விடுபட முடியாமல் அடிமையாகி கிடக்கிறார்கள். மாணவர்களுக்கு சிறு வயது முதலே, போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து மனதில் பதிய வைக்க வேண்டும். இதற்கு பாடபுத்தகத்தில் போதைப்பொருள் பற்றிய பாடத்தை சேர்த்தால் சமுதாயத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை குறைக்கலாம்" என்றார்.

10 ஆண்டுகளுக்கு முன்பே...

ேகாலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை பைப்லைன் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை அதிகாரி குணசேகரன் கூறுகையில், "போதைப்பொருள் தடுப்பு சட்டத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே அமல்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு அமல்படுத்தியிருந்தால் தற்போது போதைப்பொருள் புழக்கம் ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கும். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளை இன்று மாணவர்கள் சர்வ சாதாரணமாக பயன்படுத்துகிறார்கள். மதுபான கடைகளில் மாணவர்கள் மதுபானங்களை வாங்கி செல்கிறார்கள். இது வேதனையாக உள்ளது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பு கல்வியாண்டிேலயே போதைப்பொருள் பற்றிய பாடத்தை புத்தகத்தில் சேர்க்க வேண்டும்" என்றார்.

ஆண்டர்சன்பேட்டை 2-வது பிளாக்கை சேர்ந்த சமூக ஆர்வலர் தாமோதரன் கூறுகையில், "கர்நாடகத்தில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை சாதாரணமாக நடக்கிறது. குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடைகளில் அனைவருக்கும் தெரியும்படி வைத்து விற்பனை செய்கிறார்கள். பெயருக்காக 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யக்கூடாது என அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். பள்ளி மாணவர்கள் சாதாரணமாக சென்று சிகரெட் மற்றும் போதைப்பொருளை வாங்கி செல்வதை காண முடிகிறது. பள்ளி பாடப்புத்தகத்தில் போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த பாடத்தை சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்" என்றார்.

மது, சிகரெட்டுக்கு தடை

பெங்களூரு பழங்கள் மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் ஏ.வெங்கடேஷ் கூறுகையில், "போதைப்பொருட்களால் மாணவர்கள் பாதிக்கப்படுவதால், அதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பாடபுத்தகத்தில் போதைப்பொருள் குறித்த பாடம் இடம் பெற வேண்டும் என்று அரசுக்கு, போலீஸ் கமிஷனர் சிபாரிசு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஏனெனில் போதைப்பொருட்களால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரி அருகே போதைப்பொருட்கள் விற்க தடை செய்யப்பட்டுள்ளது.

பாடப்புத்தகத்தில் போதைப்பொருட்கள் பற்றி பாடம் நடத்துவதன் மூலமாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். போதைப்பொருட்களை போல் மது, சிகரெட்டாலும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு ஒட்டு மொத்தமாக அரசு தடை விதிக்க வேண்டும். அப்போது தான் போதை பழக்கங்களில் இருந்து மாணவர்களை மீட்க முடியும்" என்றார்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

மடிவாளாவை சேர்ந்த சந்தோஷ் கூறுகையில், "பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளது. 18 வயது நிரம்பாத சிறுவர்கள் கூட போதைப்பொருட்களை வாங்கி பயன்படுத்தும் நிலை தற்போது இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் போதைப்பொருள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் காரணம். எனவே போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.

பாடப்புத்தகத்தில் இதுகுறித்து தெரிவிக்கும் போது விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் எனவே போதைப்பொருட்கள் பற்றி பள்ளி, கல்லூரி பாடப்புத்தகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீஸ் கமிஷனர் அரசுக்கு பரிந்துரை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் போதை பழக்கத்தில் இருந்து இளம் சமுதாயத்தினரை மீட்க முடியும்" என்றார்.

போதைப்பொருளை தடுக்க போலீசாரும், அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் அதை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத சூழல் உள்ளது. இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்த அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. அதை உணர்ந்து அனைவரும் செயல்பட்டால் போதைப்பொருள் இல்லாத நிலையை உருவாக்கலாம். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!

பெங்களூருவில் கடந்த ஆண்டு ரூ.117 கோடி போதைப்பொருள் பறிமுதல்

பெங்களூருவில் போதைப்பொருட்களை ஒழிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், போதைப்பொருட்கள் பயன்படுத்துவோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அதன்படி, பெங்களூருவில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.117 கோடிக்கு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. அதாவது 6 ஆயிரத்து 261 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு நகர் முழுவதும் கடந்த ஒரு ஆண்டில் போதைப்பொருட்கள் விற்றவர்கள், பயன்படுத்தியவர்கள் மீது 6 ஆயிரத்து 191 வழக்குகள் பதிவாகி உள்ளது.

இதில், 943 வழக்குகள் போதைப்பொருட்கள் விற்ற வியாபாரிகள் மீதும், 5248 வழக்குகள் போதைப்பொருட்கள் பயன்படுத்தியோர் மீதும் பதிவாகி இருந்தது. மேலும் வெளிநாடுகளை சேர்ந்த 159 பேர் உள்பட 7882 பேரை போலீசார் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story
  • chat