பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற ரூ.7¼ கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்


பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற ரூ.7¼ கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்
x

பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற ரூ.7¼ கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற ரூ.7¼ கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூருவில் நேற்று போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

நைஜீரியாவை சேர்ந்தவர்கள்

பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோர் மீது எந்த விதமான பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெங்களூருவில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெற்கு மண்டல போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து, போதைப்பொருட்கள் விற்கும் நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நேஷனல் கல்லூரி அருகே மெட்ரோ ரெயில் நிலையம் முன்பாக இருக்கும் பூங்காவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ய முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நைஜீரியாவை சேர்ந்த லாரன்ஸ் இஜின்வோக் என்ற பீடர், ஜூக் வுனேஜம் என்பதாகும். இவர்கள் 2 பேரும் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருந்தார்கள்.

ஜாமீனில் வெளியே வந்து...

பெங்களூருவில் வசிக்கும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், கல்லூரி மாணவர்களுக்கும் போதைப்பொருட்களை 2 பேரும் விற்பனை செய்து வந்துள்ளனர். கைதான லாரன்ஸ் கடந்த ஆண்டு (2022) பிப்ரவரி மாதம் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக தலகட்டபுரா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

பின்னர் கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதம் சிறையில் இருந்து ஜாமீனில் அவர் வெளியே வந்திருந்தார். அதன்பிறகு பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை அருகே மாங்கோ லே-அவுட்டில் வாடகை வீட்டில் லாரன்ஸ் மற்றும் ஜூக் வசித்து வந்துள்ளனர். எளிதில் பணம் சம்பாதிக்க மீண்டும் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.

ரூ.7.32 கோடி மதிப்பு

கைதான 2 பேரின் விசா 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே முடிந்து விட்டது. அப்படி இருந்தும் பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து போதைப்பொருட்கள் விற்று வந்துள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் பிரவுன் சுகர், 310 கிராம் கொகைன், 1 கிலோ 150 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் பவுடர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.7 கோடியே 32 லட்சம் ஆகும்.

அவர்கள் 2 பேர் மீதும் வி.வி.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகி றார்கள். போதைப்பொருட்களை விற்ற கும்பலை திறமையாக செயல்பட்டு பிடித்து போலீசாருக்கு ரொக்க பரிசு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வி.வி.புரம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை பிரதாப் ரெட்டி மற்றும் கூடுதல் போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் பார்வையிட்டனர்.


Next Story