போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: ஜாபர் சாதிக் வழக்கை விசாரிக்கும் அதிகாரி பதவி நீக்கம் - மத்திய அரசு உத்தரவு


போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: ஜாபர் சாதிக் வழக்கை விசாரிக்கும் அதிகாரி பதவி நீக்கம் - மத்திய அரசு உத்தரவு
x

கோப்புப்படம் 

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் வழக்கை விசாரிக்கும் அதிகாரியை பதவி நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சினிமா தயாரிப்பாளரும், தமிழகத்தை சேர்ந்தவருமான ஜாபர் சாதிக் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு தலைமை துணை இயக்குனர் ஞானேஸ்வர் சிங் என்பவர் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டபோது வழக்கின் விவரங்களில் பலவற்றை அவர் மறைத்து ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுபற்றி விசாரிக்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் மேற்கு மண்டல தலைமை துணை இயக்குனர் மணீஷ்குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே அதிகாரி ஞானேஸ்வர் சிங் தான் வகித்து வந்த போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் மத்திய ஊழல் தடுப்பு அதிகாரி பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். இது குறித்த கடிதம் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் தலைமை இயக்குனர் எஸ்.என்.பிரதானுக்கு அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய ஊழல் தடுப்பு பிரிவின் புதிய அதிகாரியாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் சிறப்புப்படை அதிகாரியாக பணியாற்றி வரும் நீரஜ் குப்தா 3 மாத காலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. இனி இவரே சிறப்பு விசாரணைக்குழுவின் தலைவராகவும் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஞானேஸ்வர் சிங்கின் பதவி நீக்கத்துக்கான காரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில் "3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இது போன்று சுழற்சி முறையில் பதவி மாற்றம் செய்யப்படுவது வழக்கமான நடைமுறை தான்'' என்று போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர்சாதிக் உள்பட 5 பேரின் நீதிமன்ற காவலை வருகிற 22-ந் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story