போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு


போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
x

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லி,

2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி டெல்லியில் கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் சதானந்தம், முஜிபுர், முகேஷ், அசோக்குமார் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

5 பேரிடமும் திகார் சிறைக்கு சென்று வாக்குமூலம் பெற அமலாக்கத்துறைக்கு ஏற்கனவே கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் உள்பட 5 பேரின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் அனைவரும் டெல்லி கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது ஜாபர் சாதிக் உள்பட 5 பேரின் நீதிமன்ற காவலையும் வரும் 29ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி சுதீர் குமார் உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து அனைவரும் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story