குடிபோதையில் வாக்குவாதம்; கணவரை கொன்று, பக்கத்திலேயே படுத்து உறங்கி, காலையில் வேலைக்கு புறப்பட்ட மனைவி
உத்தர பிரதேசத்தில் இரவில் குடித்து விட்டு வாக்குவாதம் செய்த கணவரை கொலை செய்த மனைவி, பக்கத்திலேயே படுத்து உறங்கி, காலையில் வேலைக்கு புறப்பட்டுள்ளார்.
ரேபரேலி,
உத்தர பிரதேசத்தின் ரேபரேலி நகரில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தவர் அதுல். இவர் தினமும் குடித்து விட்டு, வந்து வீட்டில் சண்டை போட்டு வந்துள்ளார்.
இவரது மனைவி அன்னு. பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று அதுல் இரவில் குடித்து விட்டு போதையில் மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதில், ஆத்திரமடைந்த அன்னு, அவரது தலையில் தாக்கியுள்ளார். பின்பு கழுத்து பகுதியை நெரித்து, மூச்சு திணற செய்துள்ளார். படுகாயமடைந்த அதுல் உயிரிழந்து உள்ளார்.
இதன்பின்பு, கணவரின் உடல் அருகிலேயே இரவில் அன்னு படுத்து உறங்கியுள்ளார். அடுத்த நாள் காலையில், குழந்தைகளிடம் அதுலை எழுப்ப வேண்டாம் என கூறியுள்ளார். எழுந்து விட்டால் மீண்டும் அடிக்க தொடங்கி விடுவார் என கூறியுள்ளார்.
இதன்பின்னர், வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டார். வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய அன்னு, இரவு உணவை தயாரித்து உள்ளார். குழந்தைகள் தூங்கியதும் கணவர் அதுலின் உடலை இழுத்து சென்று, வீட்டு வாசலில் போட்டு விட்டு திரும்பியுள்ளார்.
அடுத்த நாள் காலையில், கத்தி கூச்சலிட்டு, பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்துள்ளார். குடிபோதையில் கீழே விழுந்து, அதுல் உயிரிழந்து விட்டார் என அவர்களிடம் கூறியுள்ளார்.
எனினும், இதுபற்றிய தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அன்னு அளித்த வாக்குமூலங்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்துள்ளன.
இதனை தொடர்ந்து அவரை கைது செய்து விசாரித்ததில், உண்மையை அவர் ஒப்பு கொண்டார். பின் நீதிமன்ற காவலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
போலீசார் கூறும்போது, தினமும் குடித்து விட்டு, வீட்டுக்கு வந்து மனைவியிடம் அதுல் வாக்குவாதம் செய்தும், சண்டை போட்டும் வந்துள்ளார். இதனால் அவமதிக்கப்படுகிறோம் என உணர்ந்து, கணவரை கொலை செய்ய அன்னு முடிவு செய்துள்ளார். இதனையே போலீசிலும் கூறியுள்ளார் என தெரிவித்து உள்ளனர்.