குப்பை தொட்டியில் டி.எஸ்.பி. உடல்... மாபியா கும்பலின் சதி திட்டம்; சி.பி.ஐ. விசாரணை கோரிக்கை
அரியானாவில் சுரங்க மாபியா கும்பலால் வாகனம் ஏற்றி டி.எஸ்.பி. கொடூர கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை என அவரது சகோதரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சண்டிகர்,
அரியானாவில் நூ மாவட்டத்தில் சட்டவிரோத வகையில் நடந்து வந்த சுரங்க பணிகளை நேற்று விசாரிக்க சென்ற துணை போலீஸ் சூப்பிரெண்டு சுரேந்திர சிங் பிஷ்னோய் என்பவர் வாகனம் ஏற்றி கொல்லப்பட்டார். அவரது உடல் குப்பை தொட்டி ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இந்த கொடூர சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
இதுபற்றி டி.எஸ்.பி.யின் சகோதரர் மக்கன் சிங் கூறும்போது, அது எனது சகோதரரின் வேலையல்ல. தொலைபேசி அழைப்பு வந்த பின் அந்த பகுதிக்கு அவர் சென்றுள்ளார். இதன் பின்னால் பெரிய சதி திட்டம் உள்ளது. சுரங்க துறை உள்பட உயரதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். சகோதரருக்கு வந்த தொலைபேசி அழைப்பு பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.
துணிச்சலான, நேர்மையான அதிகாரியான சுரேந்திராவுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். அவருடன் பாதுகாப்புக்கு சென்ற துப்பாக்கி ஏந்திய அதிகாரியிடமும், (சம்பவத்தின்போது குதித்து தப்பி விட்டார்) விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.
தவுடு மலை பகுதியில் சோதனை நடத்த டி.எஸ்.பி. தனது அலுவலக வாகனத்தில் சென்றுள்ளார். சம்பவம் பற்றி நேரில் கண்ட சாட்சி ஒருவர் கூறும்போது, டி.எஸ்.பி. தனது வாகனம் அருகே நின்றிருந்துள்ளார். லாரி ஓட்டுனரை நிறுத்தும்படி சைகை காட்டினார். சட்டவிரோத குவாரி பொருட்களை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் நிற்காமல் போலீசார் மீது மோதி, ஏற்றி விட்டு சென்றார் என கூறியுள்ளார்.
சில மணிநேர தேடுதல் வேட்டைக்கு பின்பு அரியானா போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். லாரி கிளீனரான இக்கார் என்பவர் போலீசாரின் என்கவுண்ட்டருக்கு பின் சுட்டு பிடிக்கப்பட்டார். விசாரணை நடந்து வருகிறது. முதல்-மந்திரி கட்டார், கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. குற்றவாளி ஒருவர் கூட தப்ப முடியாது என கூறியுள்ளார்.