துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருடன் நெதர்லாந்து பிரதமர் சந்திப்பு


துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருடன் நெதர்லாந்து பிரதமர் சந்திப்பு
x
தினத்தந்தி 11 Sep 2023 6:45 PM GMT (Updated: 11 Sep 2023 6:46 PM GMT)

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருடன் நெதர்லாந்து பிரதமர் சந்தித்து பேசினார். அப்போது தொழில் முதலீடுகள் குறித்து ஆலோசித்தனர்.

பெங்களூரு:

கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது நெதர்லாந்து நாட்டின் தொழில் நிறுவனங்களின் அதிகாரிகள் உடன் இருந்தனர். இதில் தொழில் முதலீடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-

கர்நாடகம் மற்றும் நெதர்லாந்து இடையே நல்ல நல்லுறவு உள்ளது. இந்த நல்லுறவை மேலும் பலப்படுத்த நாங்கள் விரும்புகிறோம். கர்நாடகம் தொழில் முதலீடுகளுக்கு உகந்த இடமாக உள்ளது. கர்நாடகத்தில் நெதர்லாந்து தொழில் நிறுவனங்களின் முதலீடு 9 சதவீதம் ஆகும். அந்த நாட்டை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்கள் ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் செய்துள்ளன.

அன்னிய நேரடி முதலீடுகள் அதிகளவில் கர்நாடகத்திற்கு வந்துள்ளன. நாட்டின் மொத்த முதலீடுகளில் 25 சதவீதம் கர்நாடகத்திற்கு வந்துள்ளது. நாட்டில் அதிகளவில் காபி உற்பத்தி செய்யும் மாநிலம் கர்நாடகம். உயிரி தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் கர்நாடகம் முன்னணியில் உள்ளது. தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் பெங்களூரு உலக அளவில் 4-வது இடத்தில் உள்ளது.

கர்நாடகத்தில் 63 சதவீத மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. விமானவியல் பாதுகாப்பு, போக்குவரத்து, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, ஜவுளி துறைகளுக்கு தனித்தனியாக கொள்கை வகுத்துள்ளோம். இதனால் ஒவ்வொரு துறையிலும் முதலீடுகள் ஈர்க்கப்படுகின்றன. கர்நாடகத்தில் 400-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளன.

2 சர்வதேச விமான நிலையங்கள், 47 தேசிய நெடுஞ்சாலைகள், 145 மாநில நெடுஞ்சாலைகள், 3,818 கிலோ மீட்டர் ரெயில் பாதைகள், 1 பெரிய துறைமுகம், 13 சிறிய துறைமுகங்கள் உள்ளன. 2,050 மெகவாட் சூரியசக்தி மின் உற்பத்தி மையம் உள்ளது. மைசூரு, உப்பள்ளி-தார்வார், மங்களூரு, தாவணகெரே, துமகூரு, பெலகாவி, கலபுரகி நகரங்களிலும் தொழில் வளர்ச்சிக்கு கவனம் செலுத்துகிறோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.


Next Story