தத்தா ஜெயந்தி விழாவையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு


தத்தா ஜெயந்தி விழாவையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 19 Nov 2022 6:45 PM GMT (Updated: 19 Nov 2022 6:45 PM GMT)

தத்தா ஜெயந்தி விழாவையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று மாவட்ட கலெக்டர் ரமேஷ் கூறினார்.

சிக்கமகளூரு:

தத்தா ஜெயந்தி விழாவையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று மாவட்ட கலெக்டர் ரமேஷ் கூறினார்.

தத்தா ஜெயந்தி விழா

சிக்கமகளூரு மாவட்டத்தில் சந்திர திரிகோண மலை அமைந்துள்ளது. அங்கு பாபாபுடன் கிரி கோவில் அமைந்திருக்கிறது. அந்த கோவிலில் தத்தா பாதம் அமைந்துள்ளதாகக் கூறி இந்துக்களும் வழிபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அடுத்த மாதம்(டிசம்பர்) 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை தத்தா ஜெயந்தி விழாவை கொண்டாட பா.ஜனதாவினர், பஜ்ரங்தள உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்கள் மாலை அணிந்து விரதமும் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தத்தா ஜெயந்தி விழா கொண்டாடுவது குறித்து சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் ரமேஷ் தனது அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் போலீஸ் துறை, இந்து சமய அறநிலையத்துறை உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் கலெக்டர் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஷோபா யாத்திரை

வருகிற டிசம்பர் 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை தத்தா ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள, சங்க்பரிவார் உள்பட ஏராளமான இந்து அமைப்புகள் சேர்ந்து தத்தா ஜெய்ந்தி விழாவை கொண்டாட உள்ளன. டிசம்பர் 6-ந் தேதி அனுசுயா ஜெயந்தி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 7-ந் தேதி ஷோபா யாத்திரை நடக்கிறது. இந்த யாத்திரையை பிரமாண்டமான முறையில் நடத்த இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த யாத்திரையில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8-ந் தேதி பாபாபுடன் கிரி மலைக்கு சென்று தத்தா பீடம் மற்றும் தத்தா பாதத்தை தரிசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தத்தா ஜெயந்தி விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

சிக்கலின்றி முடிக்க...

அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க போலீசார் குவிக்கப்படுவார்கள். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.போக்குவரத்து நெரிசலையும், கூட்ட நெரிசலையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை தவிர கோவிலுக்கு வருபவர்களுக்காக கழிவறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் சாலை சீரமைப்பு பணி, சந்திரதிரிகோண மலை மற்றும் பாபாபுடன் கிரி மலையில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவிழாவையொட்டி மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. விழாவை சிக்கலின்றி முடிக்க அனைத்து துறை அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story