குஜராத்தில் திரும்ப திரும்ப நிலநடுக்கம் நிகழும் அம்ரேலி மாவட்டம்..!!
அம்ரேலி மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 400 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளன.
ஆமதாபாத்,
குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா பிராந்தியத்தில் அம்ரேலி மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டம், 'நிலநடுக்க திரள்' என்ற அரிய நிலநடுக்க நிகழ்வின் மையப்புள்ளியாக திகழ்வது தெரிய வந்துள்ளது.
நிலநடுக்க திரள் என்பது சிறிய அளவிலான நிலநடுக்கம் அடிக்கடி நடப்பது ஆகும். அது, குறுகிய நேரமே நீடித்தாலும், நாட்கணக்கில், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் அதே இடத்தில் திரும்ப திரும்ப நிகழக்கூடியது. இதற்கு பூமித்தட்டின் அமைப்பும், நீரியல்சார்ந்த நிகழ்வுமே காரணங்கள் என்று நிலநடுக்க ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை இயக்குனர் சுமீர் சோப்ரா தெரிவித்தார்.
அம்ரேலி மாவட்டத்தில், கடந்த 2 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்களில், மொத்தம் 400 லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் 86 சதவீத நிலநடுக்கங்கள், ரிக்டர் அளவுகோலில் 2-க்கு கீழ் பதிவானவை. வெறும் 5 நிலநடுக்கங்கள் மட்டுமே 3-க்கு மேல் பதிவாகின.
இவற்றை பெரும்பாலும் மக்களால் உணர முடியாது. இருப்பினும், அம்ரேலி மாவட்டத்தின் மிதியாலா கிராமத்தில், பெரும்பாலான நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. அதனால் அங்குள்ள மக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தினமும் இரவில் வீட்டுக்கு வெளியே தூங்கி வருகிறார்கள்.