பெண்களுக்கு பொருளாதார அதிகாரம் அளிப்பது வளர்ச்சியை அதிகரிக்கும் - பிரதமர் மோடி கருத்து


பெண்களுக்கு பொருளாதார அதிகாரம் அளிப்பது வளர்ச்சியை அதிகரிக்கும் - பிரதமர் மோடி கருத்து
x

பெண்களுக்கு பொருளாதார அதிகாரம் அளிப்பது வளர்ச்சியை அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

காந்திநகர்,

குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில், பெண்களுக்கான அதிகாரம் குறித்த மந்திரிகள் மாநாடு நடந்தது. ஜி-20 மாநாட்டு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இம்மாநாடு நடந்தது. அதில், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

பெண்கள் செழித்தால் உலகம் செழிக்கும். பெண்களுக்கு பொருளாதார அதிகாரம் அளிப்பது, வளர்ச்சியை அதிகரிக்கும். பெண் தொழில்முனைவோருக்கு சமமான போட்டி சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும். அவர்கள் சந்தைகளில் நுழைவதற்கான முட்டுக்கட்டைகளை அகற்ற வேண்டும். அவர்கள் கல்வி பெறுவது, சர்வதேச முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். அவர்களின் குரல், ஆக்கப்பூர்வமான மாற்றத்தை உருவாக்கும்.

உதாரணமாக, மகாத்மா காந்தி பயன்படுத்திய ராட்டையை கண்டுபிடித்தது கூட ஒரு பெண்தான். அவர் பெயர் கங்காபென். பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அவர் வாழ்ந்து வந்தார். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க சிறந்த வழி, அவர்கள் தலைமையில் வளர்ச்சியை ஏற்படுத்துவதுதான். இந்த திசையில்தான் இந்தியா பயணக்கிறது.

உதாரணமாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு, தானே முன்னுதாரணமாக திகழ்கிறார். அவர் எளிமையான பழங்குடியின பின்னணியில் இருந்து வந்தவர். இன்று, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராக இருக்கிறார். உலகின் 2-வது வலிமையான படையின் முப்படை தலைவராக இருக்கிறார்.

ஓட்டு போடும் உரிமையும், தேர்தலில் போட்டியிடும் உரிமையும் ஆரம்பத்தில் இருந்தே பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 14 லட்சம் மக்கள் பிரதிநிதிகளில், 46 சதவீத பிரதிநிதிகள் பெண்கள் ஆவர். அதுபோல், 80 சதவீத நர்சுகளும், மருத்துவச்சிகளும் பெண்கள்தான். கொரோனா காலத்தில் அவர்கள் முன்வரிசையில் இருந்து செய்த பணிகளுக்காக நாடு பெருமைப்படுகிறது.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்காக 'முத்ரா' திட்டத்தில் 70 சதவீத கடன்கள், பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின்கீழ், 80 சதவீத பயனாளிகளும் பெண்கள்தான். 'உஜ்வாலா' திட்டத்தின்கீழ், கிராமப்புற பெண்களுக்கு சுமார் 10 கோடி சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டுக்கு பிறகு, தொழிற்சாலை பயிற்சி நிலையங்களில் தொழில்நுட்ப கல்வியில் சேரும் பெண்கள் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது.

நான்கில் ஒரு பங்கு விண்வெளி விஞ்ஞானிகள், பெண்களாக உள்ளனர். அவர்களின் கடின உழைப்பால்தான், சந்திரயான், ககன்யான் போன்ற திட்டங்கள் வெற்றி பெறுகின்றன. இன்று, ஆண்களை விட அதிக அளவில் பெண்கள் உயர் கல்வியில் சேருகிறார்கள். அதிகமான பெண் விமானிகளை பெற்ற நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இந்திய விமானப்படை பெண் விமானிகள், தற்போது போர் விமானங்களை ஓட்டுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story