நிலக்கரி ஊழல் வழக்கு: பெண் ஐஏஎஸ் அதிகாரி கைது - அமலாக்கத்துறை அதிரடி


நிலக்கரி ஊழல் வழக்கு: பெண் ஐஏஎஸ் அதிகாரி கைது - அமலாக்கத்துறை அதிரடி
x
தினத்தந்தி 22 July 2023 1:55 PM GMT (Updated: 22 July 2023 1:58 PM GMT)

நிலக்கரி ஊழல் வழக்கில் பெண் ஐஏஎஸ் அதிகாரியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநில ஐஏஎஸ் அதிகாரி ரனு சஹு. இவர் அம்மாநில வேளாண்துறை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே, வேளாண்துறை இயக்குனராக பணியாற்றுவதற்கு முன்னர் ரனு சஹூ நிலக்கரி வளம் அதிகம் நிறைந்த ரொர்பா மற்றும் ராய்கர் மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றியுள்ளார். இவர் கலெக்டராக பணியாற்றிய காலத்தில் அப்பகுதியில் உள்ள நிலக்கரியை வெட்டி எடுத்து விற்பனை செய்யப்படும்போது ஒரு டன் நிலக்கரிக்கு தலா 25 ரூபாய் கூடுதலாக வரி வசூலித்து அதில் கோடிக்கணக்கில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழலில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாடு எழுந்தது.

தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் என பலர் இந்த ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இதில் பணமோசடியும் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே ஒரு ஐஏஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக ரனு சஹூ வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சட்டவிரோத பணமோசடி, 5.52 கோடி ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத சொத்துச்சேர்த்ததற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது.

இதனை தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி ரனு சஹூவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரனு சஹூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 3 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதியளித்துள்ளது. இதனை தொடர்ந்து ரனு சஹூ அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


Next Story